டெல்லியின் 5 எல்லைகளுக்கு சீல் வைப்போம் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..
கடந்த செப்டம்பரில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளன. எதிர்காலத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் நிறுத்தப்படும் என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. ஆனால் மத்திய அரசின் பேச்சை விவசாயிகள் நம்ப தயாராக இல்லை. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 13-ம் தேதி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் விவசாயிகள் தரப்பில் 5 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் ஏற்கெனவே திட்டமிட்டபடி, பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டிராக்டர், லாரிகளில் கடந்த 26-ம் தேதி டெல்லி நோக்கி புறப்பட்டனர்.
கடந்த 26, 27-ம் தேதிகளில் ஹரியாணா, டெல்லி போலீஸார் விவசாயிகள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால் விவசாயிகள் உறுதியாக முன்னேறியதால் அவர்கள் டெல்லிக்குள் நுழைய போலீஸார் அனுமதி வழங்கினர்.
எனினும் டிராக்டர், லாரிகளை டெல்லிக்கு வெளியே நிறுத்திவிட்டு விவசாயிகள் மட்டும் டெல்லிக்குள் நுழையலாம். டெல்லி புராரியில் உள்ள மைதானத்தில் அமைதியாக போராட்டம் நடத்தலாம் என்று டெல்லி போலீஸார் அறிவித்தனர்.
தலைநகர் டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் டெல்லி போலீஸின் கட்டுப்பாடு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்ப டெல்லி போலீஸார் செயல்பட்டு வருகின்றனர்.
வரும் 3-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்கள் கருப்பு சட்டங்கள் என்றும், அந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். மத்திய அரசு பொறுத்தவரை வேளாண் சட்டங்களில் ஒரு வார்த்தையைகூட மாற்ற விரும்பவில்லை.
இந்த பின்னணியில் டெல்லியின் 5 எல்லை பகுதிகளை முற்றுகையிட்டு சீல் செய்வோம். டெல்லியில் இருந்து யாரும் வெளியேற முடியாது. யாரும் உள்ளே நுழைய முடியாது என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். விவசாயிகளின் போாட்டத்தால் தலைநகர் டெல்லியில் பதற்றம் நீடிக்கிறது.