கணவரை இழந்த இளம்பெண் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கணவரின் தந்தையை மறுமணம் செய்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவரது மகன் கவுதம் சிங்குக்கும் ஆர்த்திக்கும் கடந்த 2016-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு உடல்நலக் குறைவால் கவுதம் சிங் உயிரிழந்தார்.
தனிமரமான ஆர்த்தி கணவர் வீட்டிலேயே தங்கிவிட்டார். அவரை மாமனார் கிருஷ்ணா கவனித்து வந்தார். 18 வயதில் திருமணமான ஆர்த்திக்கு தற்போது 22 வயதாகிறது. மாமனார் கிருஷ்ணாவுக்கு 55 வயதாகிறது.
எதிர்பாராத திருப்பமாக மாமனார் கிருஷ்ணாவும் மருமகள் ஆர்த்தியும் முறைப்படி திருமணம் செய்து கொள்ள உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகத்தை அணுகினர். இதுகுறித்து ராஜ்புத் கஸ்தாரிய மகாசபா பஞ்சாயத்தை பரிசீலனை செய்து திருமணத்துக்கு ஒப்புதல் வழங்கியது. ஆர்த்தியின் பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.
கடந்த ஜூன் 30-ம் தேதி பிலாஸ்பூரில் மாமனார் கிருஷ்ணா, மருமகள் ஆர்த்தியின் திருமணம் எளிமையாக நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலால் முக்கிய உறவினர்கள் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
கணவரை இழந்த பெண்ணுக்கு மறுமணம் அவசியம். ஆனால் மகளாகப் பாவிக்க வேண்டிய மருமகளை, மாமனாரே திருமணம் செய்திருப்பது வருத்தமளிக்கிறது என்று நெட்டிசன்கள் ‘உச்’ கொட்டி வருகின்றனர்.