தனியார் வங்கி ஏடிஎம்-களில் ரொக்க பணம் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
“வங்கி விடுமுறை நாட்களிலும், மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரையிலான நேரத்தில் ஏடிஎம்களில் பணம் செலுத்தினால் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ஒரு மாதத்தில் ஒரு முறையிலோ அல்லது பல முறையாகவோ ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஏடிஎம் இயந்திரம் வாயிலாக பணம் செலுத்தியிருந்தால் கட்டணம் வசூலிக்கப்படும். நவம்பர் 1-ம் தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது” என்று ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.
இதே திட்டத்தை ஆக்ஸிஸ் வங்கி கடந்த ஆகஸ்ட் மாதமே தொடங்கிவிட்டது. ஏடிஎம் மூலம் பணம் செலுத்த அந்த வங்கி ரூ.50 கட்டணம் வசூலிக்கிறது. அடுத்தடுத்து பல்வேறு தனியார் வங்கிகள் இத்திட்டத்தை தொடங்க உள்ளது.
குறைந்த ரொக்கம், அதிக டிஜிட்டல் என்ற ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவு காரணமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று தனியார் வங்கி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.