ரியா… நீயா இப்படி? நடிகை மீது சுஷாந்தின் தந்தை போலீஸில் புகார்

பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சுஷாந்தின் தற்கொலை தொடர்பாக மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


நடிகர் சுஷாந்த் முதலில் அங்கிதா என்ற நடிகையை காதலித்து வந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். கடந்த சில ஆண்டுகளாக நடிகை ரியா சக்கரவர்த்தியை அவர் காதலித்து வந்ததார்.


போலீஸின் முதல்கட்ட விசாரணையில் சுஷாந்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை ரியா பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. அவர் போலீஸில் அளித்துள்ள வாக்குமூலத்தில், “யாஷ் சோப்ரா பிலிம்ஸ் ஒப்பந்தத்தில் இருந்து சுஷாந்த் விலகிவிட்டார். என்னையும் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தினார்” என்று தெரிவித்தார்.


இயக்குநரும் தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி போலீஸில் அளித்த வாக்குமூலத்தில், நான் 3 படவாய்ப்புகளை சுஷாந்துக்கு அளித்தேன். ஆனால் யாஷ் சோப்ரா பிலிம்ஸ் ஒப்பந்தத்தால் அவரால் எனது படங்களில் நடிக்க முடியவில்லை” என்று தெரிவித்தார்.

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்


இந்த பின்னணியில் சுஷாந்தின் தந்தை கே.கே.சிங், பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், எனது மகனின் ரூ.15 கோடி பணத்தை நடிகை ரியா சக்கரவர்த்தி எடுத்துள்ளார். ரியாவே அவனை தற்கொலைக்கும் தூண்டியுள்ளார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.


இதுதொடர்பாக பாட்னா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மும்பை போலீஸில் கே.கே.சிங் புகார் அளிக்கவில்லை.சுஷாந்தின் தற்கொலை தொடர்பாக பாலிவுட்டின் பெரும் புள்ளிகளிடம் மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரியா சக்கரவர்த்தி

அவர்களின் செல்வாக்கை மீறி ஒன்றும் செய்ய முடியாது என்பதால் பிஹார் போலீஸில் கே.கே. சிங் புகார் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. சுஷாந்த் சிங்கின் பூர்விகம் பிஹார் தலைநகர் பாட்னா ஆகும்.சுஷாந்தின் ரசிகர் ஒருவர் கடந்த வாரம் ரியா சக்கரவர்த்தி மீது சமூக வலைதளத்தில் கடுமையான புகார்களை தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக ரியா மும்பை போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் சுஷாந்த் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ரியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். இப்போது அவர் மீதே குற்றம் சுமத்தப்பட்டிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *