சென்னையை அடுத்த குன்றத்தூர் வெளிவட்டசாலையில் கல்லூரி ஒன்றின் அருகே எருமை மாடு ஒன்று விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் வந்தது. உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர்கள் இளங்கோவன், அருள்ஜோதி ஆகியோர் தலைமையில் 6 பேர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது, எருமை மாட்டின் மீது லோடு வாகனம் ஒன்று ஏறி நின்றுக்கொண்டிருந்தது.
வலியால் எருமை மாடு சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. இதையடுத்து அவ்வழியாக சென்ற பொதுமக்களின் உதவியோடு லோடு வாகனத்தை அகற்றி எருமை மாட்டைக் காப்பாற்றினர். மாட்டின் பின்பக்க காலில் காயம் ஏற்பட்டது. அதனால் மாட்டால் நிற்க முடியவில்லை. அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற வாகனங்கள் மாட்டின் மீது மீண்டும் மோத வாய்ப்புள்ளது.
அதனால் மாட்டை அங்கிருந்து பொதுமக்கள் உதவியோடு தீயணைப்புத்துறையினரின் மீட்டு சாலையின் ஓரமாக கொண்டு சென்றனர். அதற்குள் மாட்டின் உரிமையாளர் அங்கு வந்தனர். அவர்களிடம் மாட்டை ஒப்படைத்த பிறகு தீயணைப்புத்துறையினர் புறப்பட்டு வந்தனர்.
மழையின் காரணமாக வெளிவட்ட சாலையில் மின்விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கியிருந்தது. அப்போது சாலையை எருமை மாடு ஒன்று கடந்திருக்கிறது. அப்போது அவ்வழியாக சென்ற வாகனம் மாட்டின் மீது மோதி விற்காமல் சென்றிருக்கிறது. அதனால் சாலையில் விழுந்த மாட்டின் மீது செல்போன் டவருக்கு லோடு ஏற்றிச் சென்ற லோடு வாகனம் மோதி ஏறி நின்றிருக்கிறது.
சுமார் ஒன்றரை டன் எடையுள்ள பொருள்கள், லாரியின் எடை ஆகியவற்றால் மாடு உயிருக்குப்போராடிக் கொண்டிருந்து. நல்ல வேளை உடனடியாக மாட்டை உயிரோடு மீட்டுள்ளோம். விபத்தில் சிக்கிய லாரியையும் ஓரமாக அகற்றியிருக்கிறோம் என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.