முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்.. உயர் கல்வித் துறை விளக்கம்…அளித்துள்ளது.
இதுதொடர்பாக உயர் கல்வித் துறை முதந்மைச் செயலாளர் கணேசன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
“கலை அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவியருக்கு முழு கல்வி கட்டணத்தையும் தமிழக அரசு செலுத்தி வருகிறது.
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் கோரி மாணவர்கள் விண்ணப்பித்தால் அதன் மீது தகுந்த விசாரணை மேற்கொண்டு 5 நாட்களில் சான்றிதழ் வழங்க வேண்டும். பட்டயப் படிப்புகள், பட்டப்படிப்புக்கு இணையாக கருத முடியாது.
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களின் உடன்பிறந்தவர்கள் கல்லூரிகளில் பட்டப்படிப்பை படித்தால் வட்டாட்சியர்கள் சான்றிதழ் வழங்க மறுப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்பத்தில் யாரேனும் பட்டப்படிப்பை படித்து முடிக்காமல் விட்டாலும், பட்டப்படிப்பை படித்துக் கொண்டிருந்தாலும் அந்த நபர் பட்டதாரி இல்லாத குடும்பத்தை சேர்ந்தவர் என்றே கருத வேண்டும். இதுதொடர்பாக வட்டாட்சியர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்” என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.