காணாமல்போன 5 இந்திய இளைஞர்களை சீனா இன்று ஒப்படைத்தது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தின் டபரிஜோ பகுதியை சேர்ந்த 7 பேர் கடந்த 4-ம் தேதி அங்குள்ள நச்சோ வனப்பகுதிக்கு வேட்டையாட சென்றனர். அவர்கள் ‘டாகின்’ என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அப்போது எல்லைப் பகுதிக்கு வந்த சுமார் 20 சீன வீரர்கள், வேட்டையாட சென்றவர்களில் 5 பேரை கடத்திச் சென்றனர். சீன ராணுவத்தினரிடம் இருந்து தப்பிய 2 பேர், நச்சோ காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதில், டோக் சிங்கம், பிரசாத் ரிங்லிங், டோண்டு எபியா, தானு பேக்கர், நாகாரு திரி ஆகிய 5 இளைஞர்களை சீன ராணுவம் கடத்திச் சென்றுவிட்டனர் என்று தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் இந்திய ராணுவத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்திய ராணுவ தரப்பில், சீன ராணுவத்திடம் தொலைபேசி வாயிலாக விளக்கம் கேட்கப்பட்டது. “நாங்கள் யாரையும் பிடிக்கவில்லை” என்று சீன ராணுவம் மழுப்பலாக பதில் அளித்தது. இதற்கு இந்திய ராணுவம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது.
இதன்பிறகு 5 இந்திய இளைஞர்களும் தங்களது காவலில் இருப்பதை சீன ராணுவம் கடந்த 8-ம் தேதி ஒப்புக் கொண்டது. எனினும் அவர்களை உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை.
“5 இந்திய இளைஞர்களும் உளவாளிகள். வேட்டைக்காரர்கள் என்ற பெயரில் சீன எல்லைக்குள் நுழைந்துள்ளனர்” என்று சீன ராணுவம் குற்றம் சாட்டியது.
இதை மறுத்த இந்திய ராணுவம், அப்பாவி இளைஞர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்தது.
கடந்த 10-ம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் சந்தித்துப் பேசினர்.
அப்போது எல்லையில் பதற்றத்தை தணிக்க 5 அம்ச திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
குறிப்பாக எல்லையில் அமைதியை நிலைநாட்ட நல்லெண்ண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று 5 அம்ச திட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, எல்லையில் காணாமல்போன 5 இந்திய இளைஞர்களையும் சீன ராணுவம் இன்று பிற்பகலில் இந்தியாவிடம் ஒப்படைத்தது.
அசாம் மாநிலம், அன்ஜா மாவட்டம், கிபிது பகுதி அருகேயுள்ள வாச்சா கிராம எல்லையில், இந்திய ராணுவத்திடம் 5 பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.