ஜப்பானியர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச கொரோனா பாதிப்பில் ஜப்பான் 45-வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. நாள்தோறும் சராசரியாக 2,500 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் ஜப்பானிய மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட வகை செய்யும் சட்டம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 12.6 கோடி மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனத்திடம் இருந்து கரோனா தடுப்பூசிகளை ஜப்பான் அரசு வாங்குகிறது. இதன்மூலம் 6 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இதேபோல அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்திடம் இருந்து வாங்கும் கரோனா தடுப்பூசி மூலம் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
இவை தவிர பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்திடம் இருந்து 12 கோடி கரோனா தடுப்பூசிகளை வாங்க ஜப்பானிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.