தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
“தமிழகத்தில் வரும் டிசம்பர் இறுதிக்குள் 1.6 கோடிபேருக்கு கொரோனா தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளது. தடுப்பூசி போடப்படுவதை அதிகரிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து உள்ளது.
பிப். 1-ம் தேதி முதல் முன் கள பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசும் கேட்டுக்கொண்டுள்ளது. அந்த வகையில் போலீசார், வருவாய் துறை, பத்திரிகை துறை உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இதுவரை 3.5 லட்சம் முன்கள பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்து உள்ளனர். அவர்களில் 1.2 லட்சம் பேர் போலீஸார். 1.20 லட்சம் பேர் வருவாய் துறை ஊழியர்கள்.
பிப். 1 முதல் மூத்த குடிமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுமார் 12 லட்சம் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன.
தடுப்பூசிகளை பொறுத்தவரை எதிர்பார்த்த இலக்குகளை எட்ட இயலாததால் தமிழகம் முழுவதும் சுமார் 200 தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக்கொள்வது எந்த வகையிலும் கட்டாயம் அல்ல. அவரவர் விருப்பத்தின் பேரில் போட்டுக்கொள்ளலாம்” என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.