அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
“கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டு அச்சத்துடன் இருக்கின்றனர். இந்த வைரஸ் நோய் குணமடைவதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் அரசின் செலவிலேயே இலவசமாக தடுப்பூசி போடப்படும்” என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக சார்பில் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பிஹார் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா இலவச தடுப்பூசி போடப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் இதர மாநிலங்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி கிடையாதா என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா விளக்கம் அளித்துள்ளார்.
“இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிலையில் உள்ளது. தடுப்பூசி தயாரான பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு குறைந்த விலையில் வழங்கும்.
மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடுவது அல்லது அதற்கான விலையை நிர்ணயிப்பது, அந்தந்த மாநில அரசுகளின் உரிமை. அந்த வகையில் பிஹாரில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.