தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று இலவச பாடப்புத்தகங்கள், புத்தக பைகள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் இலவச புத்தகங்களை வழங்க பள்ளி கல்வி இயக்குநர் அண்மையில் உத்தரவிட்டார்.
இதன்படி தமிழகம் முழுவதும் இன்று 2, 3, 4, 5, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடநூல்கள், புத்தக பைகள் வழங்கப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது. இதை அனைவரும் கண்டிப்புடன் பின்பற்றினர்.
அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், தங்களிடம் படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு புத்தகம் வழங்கும் விவரங்களை முன்கூட்டியே அறிவித்திருந்தனர்.

இதன்காரணமாக காலை முதலே அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவியர் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்களை ஆசிரியர்கள் ஒழுங்குபடுத்தினர்.
பள்ளிக் கல்வித் துறையின் அறிவுரைப்படி ஒரு மணி நேரத்துக்கு 20 பேர் என்ற வகையில் மாணவ, மாணவியர் அனுமதிக்கப்பட்டு விலையில்லா புத்தகங்களும் புத்தக பைகளும் வழங்கப்பட்டன.

பள்ளியின் முகப்பில் சானிடைசர் வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பயன்படுத்தி மாணவர்களும் பெற்றோரும் கைகளை சுத்தம் செய்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு சக நண்பர்கள், தோழிகளை நேரில் சந்தித்த மகிழ்ச்சியில் மாணவ, மாணவியர் துள்ளி குதித்தனர்.
இன்று புத்தகங்களை பெற்றுக் கொள்ளாத மாணவ, மாணவியர் தங்களது வகுப்பு ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு எப்போது புத்தகம் வாங்க வர வேண்டும் என்ற விவரத்தை கேட்டு அறிந்து கொள்ளலாம்.

அடுத்த சில நாட்களுக்கு பள்ளிகள் திறந்திருக்கும். விலையில்லா பாடப்புத்தகங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சத்துணவு திட்ட மாணவர்களுக்கு பள்ளிகளில் அரிசி, பருப்பு வழங்கப்படுகிறது. அந்தப் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் செயல்படும் சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை ராணி தலைமையிலான ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்கினர்.