தமிழகம் முழுவதும் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜா என 10 போலீஸாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ்காரர்கள் 2 பேர் செல்போனில் பேசிய ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வருபவர்களைத் தாக்கிய விவரங்களை இருவரும் பேசியிருந்தனர். இதையடுத்து ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸாருக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்தன. அதற்கு ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு மறுப்பு தெரிவித்தது.
சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு தடை விதிக்கப்பட்டது. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை என்றும் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை காவல் நிலையத்தில் அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் அறிவுறுத்தினர்.
இந்த சூழ்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணையில், “தமிழக காவல் துறை தலைவரின் அறிக்கையை ஏற்று தமிழகம் முழுவதும் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.