தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு தடை

தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் மரணம்

சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜா என 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் பாதுகாப்பு கருதி மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ்காரர்கள் 2 பேர் செல்போனில் பேசிய ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வருபவர்களைத் தாக்கிய விவரங்களை இருவரும் பேசியிருந்தனர். இதையடுத்து ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸாருக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்தன. அதற்கு ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு மறுப்பு தெரிவித்தது.

நெல்லை, திருச்சி…


இந்த நிலையில் தமிழக காவல் துறையில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸிக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் உள்ளிட்ட தன்னார்வலர்களை எந்த பணிகளுக்கும் காவல் துறை பயன்படுத்தக்கூடாது என நெல்லை சரக டிஐஜி பிரவின்குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார்.


திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை என்றும் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை காவல் நிலையத்தில் அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி சரக டிஐஜி தெரிவித்துள்ளார்.

மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தான்குளம் இரட்டை கொலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை கலைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்தோம். அதன் எதிரொலியாக ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் அமைப்புக்கு தடை விதிப்பதாக தமிழக காவல் துறை அறிவித்திருப்பதை வரவேற்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *