சமையல் காஸ் ஓடிபி திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் அமல் செய்யப்பட உள்ளது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் நாடு முழுவதும் சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. சமையல் காஸ் சிலிண்டர்கள் சரியான நபருக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் ‘ஓடிபி’ திட்டத்தை எண்ணெய் நிறுவனங்கள் சோதனை அடிப்படையில் அமல்படுத்தி வருகின்றன.
தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் மற்றும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் சோதனை அடிப்படையில் ஓடிபி திட்டம் அமலில் உள்ளது.
இதன்படி சமையல் காஸ் முன்பதிவு செய்த வாடிக்கையாளரின் செல்போனில் ஓடிபி எண் அனுப்பி வைக்கப்படுகிறது. சமையல் சாஸ் சிலிண்டரை விநியோகிக்க வருபவரிடம் அந்த ஓடிபி எண்ணை கூறினால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும்.
இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் மாவட்டங்களில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் ஓடிபி திட்டம் அமலுக்கு வருகிறது.
தொலைத்தொடர்பு சிக்னல் கிடைக்காத பகுதிகளில் ஓடிபி திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.