அமெரிக்க கருப்பின ஜார்ஜ் பிளாய்டின் மரண புகைப்படம் உலகையே புரட்டிப் போட்டது. அவரது கடைசி தருண வீடியோ தற்போது வெளியே கசிந்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 25-ம் தேதி அமெரிக்காவின் மினசோட்டா மாகாண தலைநகர் மின்னபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின இளைஞர் கள்ள நோட்டு வைத்திருப்பதாக கடைக்காரர் ஒருவர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீஸார் ஜார்ஜ் பிளாட்டை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
அப்போது போலீஸ் அதிகாரி டெரக் என்பவர் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் முழங்காலால் மிதித்து அழுத்தினார். “என்னால் மூச்சு விட முடியவில்லை” என்று பிளாய்ட் மன்றாடியும் அந்த அதிகாரி கழுத்தை விடாமல் அழுத்தி நெரித்தார். இதன்காரணமாக கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ, புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜார்ஜ் பிளாய்ட் மரணத்துக்கு நீதி கோரி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இன்றுவரை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்ட் கைது செய்யப்பட்ட கடைசி தருண வீடியோ ஊடகங்களுக்கு கிடைத்துள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தனது காரில் அமர்ந்திருக்கும் ஜார்ஜ் பிளாய்டை போலீஸார் கைது செய்து தங்கள் காருக்கு அழைத்து வருகின்றனர். மரண பீதியில் அவர் கதறுகிறார். ஆனால் போலீஸார் விடாமல் அவரை துன்புறுத்துகின்றனர்.
இந்த புதிய வீடியோ அமெரிக்காவில் கருப்பின மக்களின் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் என்று தெரிகிறது.