உத்தர பிரதேசத்தில் கொரோனா பீதியால் பஸ்ஸிலிருந்து தள்ளிவிடப்பட்ட இளம்பெண் மரணம் அடைந்தார்.
உத்தர பிரதேசம் ஷிகோகாபாத்தை சேர்ந்தவர் அனிகா யாதவ் (வயது 19). இவர் சில நாட்களுக்கு முன்பு தனது தாயார் சர்வேஸுடன், ஷிகோகாபாத்தில் இருந்து நொய்டாவுக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார். யமுனா எக்ஸ்பிரஸ் வே நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது அனிகாவுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்று பஸ் நடத்துநர், ஓட்டுநர், பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தாயும் மகளும் பஸ்ஸை விட்டு இறங்குமாறு வற்புறுத்தினர். நடுவழியால் எவ்வாறு இறங்குவது என்று அனிகாவின் தாய் சர்வேஷ் கேட்டார்.
ஆத்திரமடைந்த நடத்துநர், ஓட்டுநர், சக பயணிகள் சேர்ந்து அனிகாவையும் அவரது தாயையும் பஸ்ஸில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிட்டனர்.
இதில் தரையில் விழுந்த அனிகாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக சென்ற வாகனங்களை தாய் சர்வேஷ் நிறுத்த முயன்றுள்ளார். யாரும் வாகனத்தை நிறுத்தாத நிலையில் அனிகா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அனிகாவின் தாய் சர்வேஷ் கூறும்போது, “எனது மகளுக்கு எந்த நோயும் கிடையாது. கடும் வெப்பத்தால் அவர் மயக்கமடைந்தார். ஓட்டுநரும் நடத்துரும் ஈவு இரக்கமமின்றி பஸ்ஸில் இருந்து அனிகாவை தள்ளிவிட்டனர். தலையில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்துவிட்டார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அனிகா மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆரோக்கியமான 19 வயது பெண்ணுக்கு எப்படி மாரடைப்பு வரும். அவரது தலையில் ஏற்பட்ட காயத்தை டாக்டர்கள் பிரேத பரிசோதனையில் குறிப்பிடவில்லை. இதுதொடர்பாக மண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்ய மறுக்கின்றனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அனிகாவின் அண்ணன் விபின் யாதவ் கூறும்போது, “பஸ்ஸில் செல்லும்போது எனது தங்கைக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. கொரோனா என்று ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் சந்தேகம் எழுந்திருந்தால் ஆம்புலன்ஸுக்கு போன் செய்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பியிருக்க வேண்டும். அதைவிடுத்து பஸ்ஸில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதன்காரணமாகவே எனது தங்கை உயிரிழந்துள்ளார். அவளது மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று ஆவசேமாக கூறினார்.
இதுகுறித்து மண்ட் போலீஸார் கூறும்போது, “அனிகா கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆதாரம் இல்லாமல் யாரையும் கைது செய்ய முடியாது. அப்பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம்” என்று மழுப்பலாக விளக்கம் அளிக்கின்றனர்.
கொரோனா பீதியால் மனிதாபிமானம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.