மகாராஷ்டிராவை சேர்ந்த தொழிலதிபர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள தங்க முகக் கவசம் அணிகிறார்.
மகாராஷ்டிராவின் புனே மாவட்டம், பிம்ரி சின்ச்வாட்டை சேர்ந்த தொழிலதிபர் சங்கர் குராடே. கழுத்தில் மிகப்பெரிய தங்க மாலை, 10 விரல்களிலும் தங்க மோதிரம், என 3 கிலோ மதிப்புள்ள தங்க நகைகளை அணிந்து இவர் வலம் வருகிறார். உள்ளூர் மக்கள் இவரை தங்க மனிதர் என்று அழைக்கின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சாதாரண முகக்கவசங்களை வாங்கக் கூட ஏழைகள் திண்டாடி வரும் நிலையில் புனே தங்க மனிதர் சங்கர் குராடே, ரூ.3 லட்சத்தில் தங்க முகக் கவசம் அணிந்து வருகிறார்.

அனைவருக்கும் தங்கம்
அவர் கூறுகையில், “நான் தங்கத்தை அதிகம் விரும்புகிறேன். சில நாட்களுக்கு முன்பு வெள்ளியில் செய்யப்பட்ட முகக்கவசத்தை ஒருவர் அணிந்திருந்தார். அவரை பின்பற்றி தங்கத்தில் முகக்கவசத்தை தயாரித்தேன்.
இதில் சிறு துளைகள் அமைக்கப்பட்டிருப்பதால் சுவாசிப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. எனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தங்க முகக்கவசம் செய்ய நகைபட்டறையில் ஆர்டர் கொடுத்துள்ளேன்” என்றார்.
தப்பிக்க முடியாது
இதுகுறித்து சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க என்95 முகக்கவசங்களே சிறந்தது. இது ரூ.200 முதல் ரூ.500-க்கு விற்கப்படுவதால் சாமானிய மக்களால் இந்த முகக்கவசத்தை வாங்குவது சிரமம்.
இந்தியாவில் மருத்துவ துறையில் மட்டுமே என்95 முகக்கவசம் பயன்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் ரூ.10 முதல் ரூ.50 வரையிலான துணி முகக் கவசங்களையே பயன்படுத்தி வருகின்றனர். சில பணக்காரர்கள் விளம்பரத்துக்காக தங்க முகக் கவசம் அணிகின்றனர். இதனால் வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க முடியாது” என்று தெரிவித்தனர்.
வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்
சங்கர் குராடேவின் புகைப்படம், வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் ஏழைகள் பரிதவிக்கும்போது இதெல்லாம் தேவையா என்று நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்தும் வருகின்றனர்.