சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா என்கிற கோவிட் -19 வைரஸ், உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது. மருந்துகள் இல்லாத சூழலில் அதைக் கட்டுபடுத்துவதே காலச்சிறந்தது எனக்கருதி உலக நாடுகள் ஊரடங்கு நடைமுறையை பின்பற்றி வருகிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. எனினும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அமல் செய்யப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் நீடிக்கும் நிலையிலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மகராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் தமிழகமும் டெல்லியும் என மாறி மாறி வருகின்றன.
ஜெட் வேகத்தில் தங்கம்
ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளிலே முடங்கியுள்ளனர். வருமானமின்றி தவித்து வருகின்றனர். உலக அளவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், தங்கத்தின் விலை மட்டும் ஊரடங்கு காலக்கட்டத்திலும் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. ஆபரணத் தங்கம் ஒரு சவரன், ரூ.37 ஆயிரத்துக்கு மேல் விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.424 உயர்ந்து ரூ.37,472-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.4,684-க்கு விற்கப்படுகிறது.
ஜூவல்லரி கடைகள் மூடப்பட்ட நிலையில் எப்படி தங்கத்தின் விலை மட்டும் ஜெட் வேகத்தில் உயர என்ன காரணம் என்ற கேள்வி ஒவ்வொருவரின் மனதில் எழுந்துள்ளது.
இதுகுறித்து தங்க வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, “ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதத்தில் 24-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ. 4532-க்கு விற்கப்பட்டது ஒரு சவரன் ரூ.34,816-க்கு விற்பனையானது. ஏப்ரலில் தங்கத்தின் விலை உயர்ந்தது. அட்சயதிருதியை நாளில் ஏப்ரல் 26-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,509-க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் ரூ.36,072-க்கு விற்பனையானது. மே மாதத்தில் விலை குறைந்தது.
தங்கத்தில் அதிக முதலீடு
ஆனால் கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் உள்ளது. இதற்கு காரணம் உலக நாடுகள் மற்ற தொழில்களில் முதலீடு செய்வதைவிட தங்கத்தின் மீது வழக்கத்தைவிட அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். அதுதான் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.
இந்தியாவில் சர்வதேச அளவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில்தான் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இத்தகைய காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. தங்க நகைகளை வாங்குவதற்குப் பதிலாக தங்க காசுகளை ஆன் லைனில் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதில் பத்து கிராம் தங்க காசுகள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. தங்க காசுக்களை அன்றைய விலைக்கு விற்கலாம் என்பதால் அதன் விற்பனை ஊரடங்கு காலக்கட்டத்தில் அதிகரித்துள்ளது” என்றனர்.