கொரோனாவுக்கு மதுராந்தகம் அரசு தலைமை டாக்டர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு மதுராந்தகம் அரசு தலைமை டாக்டர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவுடன் தமிழக அரசு டாக்டர்கள், தனியார் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள், ஆய்வக ஊழியர்கள் நாள்தோறும் போராடி வருகின்றனர்.


குறிப்பாக அரசு டாக்டர்கள் கொரோனா சிகிச்சைக்காக தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். தகுந்த பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தாலும் கொரோனாவின் கோரப்பிடியில் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் தொடர்ந்து சிக்கி வருகின்றனர்.

அரசு தலைமை டாக்டர்


கொரோனா வார்டில் பணியாற்றி வருபவர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்கப்படுகிறது. வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பணி முடிந்த பிறகும் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க முடியவில்லை. குறிப்பிட்ட காலம் தனிமைப்படுத்தி கொள்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டராக பணியாற்றி வந்தவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. 52 வயதான அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன்பிறகு சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீரழிவு மற்றும் ரத்த அழுத்த பாதிப்பு இருந்ததால் அவரது உடல்நிலை மோசமானது. சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்தது.

ரூ.1 கோடி நிவாரணம்?


கொரோனாவுக்கு உயிரிழந்த மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க பொருளாளராகப் பதவி வகித்தார். இவரது மனைவியும் டாக்டர் ஆவார். இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மருத்துவம் படித்து வருகிறார். 13 வயதாகும் 2-வது மகள் பள்ளியில் படித்து வருகிறார்.
இதுகுறித்து அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி பெருமாள் கூறுகையில், “கண்ணுக்கு தெரியாத கொரோனா எதிரியுடன் மருத்துவ துறையை சேர்ந்தவர்கள், சுகாதார துறையினர் போரிட்டு வருகின்றனர். குறிப்பாக அரசு மருத்துவர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து சேவை மனப்பான்மையுடன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மக்களின் வாழ்நாளை நீட்டிக்கும் மருத்துவர்கள், கொரோனாவால் தங்களின் வாழ்நாளை குறைத்து வருகின்றனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்குகிறார். இதேபோல தமிழக அரசும் நிவாரண உதவியை வழங்க வேண்டும். இதன்மூலம் மருத்துவர்கள் மேலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற முடியும். ” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *