டாக்டர்களின் ஊதியம் – நல்ல முடிவெடுக்க முதல்வருக்கு வேண்டுகோள்

அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநில நிர்வாகி பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை:


1) தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் தலைமையில் ஜூலை 14- ம் தேதி நடைபெறுகிறது. கொரோனா பரவல் உள்பட பல்வேறு விசயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.


2) ஊரடங்கால் பொது போக்குவரத்து இல்லாத நிலையிலும், அசாதாரண சூழ்நிலையிலும் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் மாண்புமிகு முதல்வர் வழிகாட்டுதலில், அர்ப்பணிப்போடு பணி செய்து வருகின்றனர்.

அரசுக்கு உறுதுணை


3) தமிழகத்தில் மருத்துவர்கள் பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதோடு, உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. கடந்த வாரம் மதுராந்தகம் அரசு மருத்துவர் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தது, மருத்துவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாகவும், மிகுந்த வருத்தமளிப்பதாகவும் உள்ளது. இருப்பினும் தொடர்ந்து அரசுக்கும், மக்களுக்கும் உறுதுணையாக இருந்து பணியாற்றி வரும் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து முழு வீச்சில் பணியாற்றுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


4) இருப்பினும் சுகாதாரத் துறையில் முன்னணி மாநிலமான தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே குறைவான ஊதியம் வழங்கப்படுவது வேதனை அளிக்கிறது.

அரசாணைபடி ஊதியம்


5) கடந்த ஆண்டு உரிய ஊதியம் வேண்டி மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய போது, போராட்டத்தை வாபஸ் பெற்றால், அரசு தாயுள்ளத்தோடு கோரிக்கையை நிறைவேற்றும் என்ற முதல்வரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றோம். இருப்பினும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.


6) அதுவும் மருத்துவர்கள் புதிதாக ஊதிய உயர்வு எதுவும் கேட்கவில்லை. 2009- ல் நிதித் துறையின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட அரசாணை எண் 354 ன் படி உரிய ஊதியம் வேண்டும் என்றே கேட்கிறோம். இதை செயல்படுத்துவதால், அரசுக்கு மாதத்திற்கு கூடுதலாக 20 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படும்.

உயிரை காக்கிறோம்


7) கொரோனா தடுப்பு பணிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய அரசு தயாராக இருக்கிறது. ஆனால் இங்கே கொரோனாவிடமிருந்து மக்கள் உயிரைக் காப்பாற்றும் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை தர அரசு மறுப்பது வேதனை அளிக்கிறது.


8) சுகாதாரத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ள தமிழகத்தில் அரசு மருத்துவர்கள், மற்ற மாநிலங்களை விட 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை குறைவாக ஊதியம் வாங்கி வருவது எந்த வகையிலும் நியாயமில்லை.


9) சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவர் கொரோனா ஆபத்து குறித்து கேட்ட கேள்விக்கு, நம்முடைய மருத்துவர்கள் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவர்கள். அதனால் அச்சம் கொள்ள தேவையில்லை என்று முதல்வர் பதிலளித்ததை இந்த நேரத்தில் நினைவுப்படுத்துகிறோம்.

குடும்பத்தினரை பிரிந்து…


10) பி.பி.இ.கிட் பாதுகாப்பு உடையணிந்து, பல மணி நேரம் தங்களை வருத்திக் கொண்டு, பணி செய்யும் மருத்துவர்கள், கோவிட் பணி, குவாரண்டைன் என பல நாட்கள் தங்கள் குடும்பத்தினரை பிரிந்து, பல சிரமங்களுக்கு இடையே பணி செய்து வருகிறோம்.


11) தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு குறைவாக உள்ளதோடு, குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதிலும் தமிழகம் சாதனை படைத்து வருகிறது என்றால் அரசு மருத்துவர்களின் பங்களிப்புதான் முக்கிய காரணம் என்பது அனைவருக்கும் தெரியும்.

இறைவனுக்கு சமம்


12) கொரோனா தடுப்பு பணி குறித்தும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் முழுக்க, முழுக்க மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைப்படியே அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.


13) டாக்டர்கள் தினத்தை ஒட்டி நம்முடைய முதல்வர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், டாக்டர்களுக்கு அரசு துணை நிற்கும் என தெரிவித்தார். மேலும் மருத்துவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் என முதல்வர் பெருமையாக கூறினார்.

நல்ல முடிவு


14) எனவே பொதுவாக மருத்துவர்கள் மீது, மதிப்பும், மரியாதையும் வைத்துள்ள முதல்வர், இந்த நேரத்தில் அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கையான, அரசாணை எண் 354 படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்குவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க, நல்ல முடிவை இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்க வேண்டும் என வேண்டுகிறோம். இதன் மூலம் மருத்துவர்கள் இன்னும் உற்சாகமாக பணி செய்ய வழி வகுக்கும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *