வாக்குறுதி நிறைவேற்றப்படுமா? அரசு டாக்டர்கள் எதிர்பார்ப்பு

அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி டாக்டர் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் மருத்துவர்கள் பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதோடு, உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. மதுராந்தகம் அரசு மருத்துவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அர்ப்பணிப்போடு பணியாற்றுவோம்


இருப்பினும் தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் சுகாதாரச் செயலாளர் ஆகியோரின் வழிகாட்டுதலில், தொடர்ந்து அர்ப்பணிப்போடு பணியாற்றுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் தகுதிக்கேற்ற ஊதியம் வேண்டி, நீண்ட காலமாக, மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் போராடி வருகிறோம். 2018 செப்டம்பர் 21 ம் தேதி மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்ய தயாராக இருந்தபோது, சுகாதாரத் துறை அமைச்சர் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். அப்போது அடுத்த 4 வாரங்களுக்குள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். இருப்பினும் நிறைவேற்றவில்லை.

முதல்வர் வேண்டுகோள்


கடந்த ஆண்டு ஆகஸ்டு 27 ம் தேதி தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தியபோது, லண்டன் புறப்பட தயாராக இருந்த அமைச்சர், பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அடுத்த 6 வாரத்திற்குள் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். இருப்பினும் நிறைவேற்றவில்லை.


சுகாதாரத் துறை அமைச்சர் மீண்டும், மீண்டும் மருத்துவர்களுக்கு வாக்குறுதி அளித்துவிட்டு நிறைவேற்றாததால், வேறுவழியின்றி, கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில், தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தமும், மூன்றாவது தடவையாக சாகும் வரை உண்ணாவிரதமும் மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.


போராட்டத்தை வாபஸ் பெற்றால், மருத்துவர்களின் கோரிக்கையை அரசு தாயுள்ளத்தோடு நிறைவேற்றும் என்ற முதல்வரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றோம். இருப்பினும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இடமாற்றம்

அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 118 மருத்துவர்கள் 400 முதல் 500 கி.மீட்டருக்கு அப்பால் இடமாற்றம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் மருத்துவர்கள் சங்க தலைவர் லட்சுமி நரசிம்மன் உயிரிழந்தார்.

இது தொடர்பான வழக்கில் பிப்ரவரி 28 ம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவர்கள் இடமாற்றத்தையும், 17பி குற்றவியல் ஆணையையும் ரத்து செய்ததோடு, கோரிக்கையை நிறைவேற்ற அரசை வலியுறுத்தியது.


இருப்பினும் 7 மாதங்களுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்த பிறகு இடமாற்ற உத்தரவை அரசு ரத்து செய்தது. அதுவும் 20 க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு இன்னமும் முந்தைய பணி இடம் தரப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.

கோரிக்கை நிறைவேறுமா?


பொதுவாக சுகாதாரத் துறை அமைச்சர் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது, இந்தியாவிலேயே தமிழகம் சுகாதாரத் துறை சிறந்து விளங்குவதாக, அடிக்கடி பெருமையாக கூறி வருகிறார். அதே நேரத்தில் அரசு மருத்துவர்கள் தங்கள் ஊதியத்திற்காக நீண்ட காலமாக போராடி வருவதும், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதும், ஊதியக் கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரையே கொடுத்ததும், கொரோனா சமயத்தில் கூட உயிர் காக்கும் மருத்துவர்கள் தண்டிக்கப்படுவதும் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே நடக்கிறது என்பதை வேதனையுடன் தெரிவிக்கிறோம்.


எனவே சுகாதாரத் துறை அமைச்சர் இப்போதாவது, உயிரைக் கொடுத்து பணியாற்றும் மருத்துவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு, அரசாணை எண் 354 படி ஊதியப்பட்டை நான்கை, வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தியை அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்க வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் அரசு மருத்துவர்கள் இன்னும் உற்சாகமாக பணியாற்ற வழிவகுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *