அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி பெருமாள்பிள்ளை, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
1) கொரோனாவுக்கு எதிரான போரில் அரசு மருத்துவர்கள், தமிழக முதல்வரின் வழிகாட்டுதலில், அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறோம்.
மருத்துவர்களின் தியாகம்
2) சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு, அரசு மருத்துவர்களின் பங்களிப்பு மிக முக்கிய காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் எந்த காரணமும் இன்றி, கௌரவிக்கப்பட வேண்டிய மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே குறைவான ஊதியம் வழங்கப்படுவது வேதனையளிக்கிறது.
3) 12- ம் வகுப்பில் முதல் இடம் பிடிப்பவர்கள், கடும் போட்டிக்கு பிறகு MBBS-ல் சேர்ந்து, படிப்பு முடித்து, அரசுப்பணியில் சேர்ந்து, உயிர்களைக் காப்பாற்றி வரும் நிலையில், மற்றவர்களை விட குறைவான ஊதியம் தருவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதுவும் மருத்துவர்களின் தியாகத்திற்கு ஈடு, இணையாக எதுவுமே இல்லை.
ஊதியம்
4) ஏற்கனவே நிதித்துறையின் ஒப்புதலோடு வெளியிடப்பட்ட அரசாணை எண் 354 படி அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில், ஊதியப்பட்டை நான்கை வழங்க வேண்டும் என்று தான் கேட்கிறோம்.
கொரோனாவிடமிருந்து மக்களை காக்க அரசு மருத்துவர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து பணியாற்றிவருகின்றனர். நோயாளிகள் நலனும், மருத்துவர் நலனும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்
டாக்டர் பெருமாள் பிள்ளை
5) ஊதியம் வேண்டி நாம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, காந்திய முறையில் போராடினோம். போராட்டத்திற்கு பின்பும், அரசு இதுவரை நம் கோரிக்கையை நிறைவேற்ற வில்லை.
6) அதுவும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நமக்கு மிக குறைவான ஊதியமே வழங்கப்பட்டு வந்த போதிலும், கொரோனாவுக்கு எதிரான போர் என்றவுடன், 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் முழு ஈடுபாட்டுடன் களத்தில் பணி செய்து வருகிறோம்.
உச்ச நீதிமன்ற அறிவுரை
7) மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு நாடு முழுவதும் ஊரடங்கை அரசு அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கிலும் களத்தில் நின்று உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்களுக்கு மட்டும் உரிய ஊதியத்தை அரசு வழங்க வேண்டும்.
8) ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 28-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் மருத்துவர்களின் தண்டனையை ரத்து செய்ததோடு, ஊதியக்கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்.
9) கடந்த வாரம் உச்சநீதிமன்றமே, கொரோனா போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை உடனடியாக தராவிடில் கிரிமினல் குற்றமாக கருதப்படும் என அறிவித்துள்ளது.
நாணயத்தின் 2 பக்கங்கள்
- சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் உயிரிழந்தபிறகும் கூட, இன்று வரை மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேறாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.
11) அரசு மருத்துவர்கள் தங்கள் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலையில், இரவு, பகல் என பார்க்காமல் மக்களைக் காப்பாற்ற போராடி வரும் நிலையில், உரிய ஊதியத்தை அரசு வழங்க வேண்டும்.
12) கொரோனாவிடமிருந்து மக்களை காக்க அரசு மருத்துவர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து பணியாற்றிவருகின்றனர்.
- ‘நோயாளிகள் நலனும், மருத்துவர் நலனும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்’ இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.