அரசு பள்ளிகளில் சேர விருப்பமா.. ஓடி வாங்க.. ஓடி வாங்க…

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தொலைக்காட்சி வாயிலாக அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பள்ளிகளில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு திங்கள்கிழமை முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார்.

இதன்படி தமிழகம் முழுவதும் செயல்படும் அரசு பள்ளிகளில் திங்கள்கிழமை மாணவர் சேர்க்கை தொடங்கியது. சென்னையின் பல்வேறு அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர், பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெற்றது. அதேநேரம் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதேபோல நடுநிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு சேர்க்கை நடைபெற்றது. 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

உயர்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. அரசு பள்ளிகளில் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.கொரோனா வைரஸால் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியால் தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை குறைவாகவே உள்ளது.

எனவே அரசு பள்ளிகளில் மாணவர்கள சேர்க்கை கணிசமாக அதிகரிக்கும். வழக்கத்தைவிட 2 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேருவார்கள் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *