பள்ளி கழிவறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியர்!

நாகப்பட்டினத்தை அடுத்த பாலையூர் ஒன்றியம் அழிஞ்சமங்கலம் பகுதியில் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியும் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் சுழற்சி முறையில் செயல்பட்டு வருகிறது.

பாலையூர் ஒன்றியம் அழிஞ்சமங்கலம் பகுதியில் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியும் செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளியில் தூய்மை பணியாளர்கள் இல்லை. அதனால் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைகள் தூய்மை செய்யப்படாமல் இருந்தது.

இந்த தகவல் தலைமை ஆசிரியர் வீரப்பனின் கவனத்துக்கு தெரியவந்ததும் அவரே கழிவறைகளை சுத்தம் செய்ய முடிவு செய்தார். அதன்படி கழிவறையை சுத்தம் செய்வதற்கான பிரஸ், கிருமிநாசினிகளை எடுத்துக் கொண்டு கழிவறைக்குச் சென்ற வீரப்பன், அதை சுத்தம் செய்தார்.

அதைப்பார்த்த சக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் வீரப்பனின் இந்தச் செயலை பாராட்டினர். தலைமை ஆசிரியர் வீரப்பன், கழிவறையை சுத்தம் செய்ததை வீடியோ எடுத்த சிலர் அதை சமூகவலைதளங்களில் பதிவு செய்தனர்.

அதைப்பார்த்த நெட்டிசன்கள், தலைமை ஆசிரியர் வீரப்பனின் இந்தச் செயலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

பொதுவாக அரசு பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளது. இன்னும் சில பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால் ஆசிரியர்களே தங்களின் சொந்த பணத்தில் தூய்மை பணியாளர்களை பணிக்கு அமர்த்தியிருந்தனர்.

திடீரென பள்ளிகள் திறக்கப்பட்டதால் தூய்மை பணியாளர்களைத் தேடி அலையாத தலைமை ஆசிரியர் வீரப்பனே களத்தில் இறங்கி பள்ளி கழிவறைகள் சுத்தம் செய்து ஆசிரியர்கள் வட்டாரத்தில் முன்மாதிரியாக செயல்பட்டிருக்கிறார்.

இந்தத் தகவல் பள்ளிகல்வித்துறையின் கவனத்துக்கு சென்றிருப்பதால் விரைவில் தலைமை ஆசிரியர் வீரப்பன் பணியாற்றும் பள்ளிக்கு தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாகையில் அரசு பள்ளியில் தூய்மை பணியாளர்கள் இல்லாததால் தலைமை ஆசிரியரே கழிவறையை சுத்தம் செய்த காட்சி சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

#viralvideo #headmaster #governmentschool #AdiDravidarHighSchool #headmastercleaningschooltoilet #toilet #toiletcleaning #schooltoilet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *