வரும் 13-ம் தேதி முதல் அரசு பள்ளிகளில் ஆன்லைன், தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் இதுவரை அரசு, தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளி நிர்வாகங்கள், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும், ஜும் செயலி வாயிலாகவும் ஆன்லைனில் வகுப்புகளை நடத்தி வருகின்றன.
அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக இருந்தது. இந்த குறையைப் போக்கும் வகையில் வரும் 13-ம் தேதி முதல் அரசு பள்ளிகளில் ஆன்லைன், தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகள் போன்று அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் கல்வி கற்பிக்கப்படும். இந்த திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைப்பார் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
எனினும் அரசு பள்ளிகளில் ஆன்லைன் கல்வித் திட்டத்தை தொடங்குவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் கல்வி திட்டத்துக்கு அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஸ்மார்ட் போன் அவசியம். ஆனால் ஏழை குடும்பங்களில் ஸ்மார்ட் போன் இருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அப்படியே ஸ்மார்ட்போன் இருந்தாலும் வேலைக்கு செல்லும் பெற்றோர் அதை எடுத்துச் சென்றுவிடுவார்கள்.
அரசு ஆசிரியர்களை பள்ளிக்கு வரச் சொன்னால் இப்போதைய சூழ்நிலையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. இதை அரசு கவனத்தில் கொள்ளுமா என்று ஆசிரியர் தரப்பு கேள்வி எழுப்புகிறது.
எனவே தமிழக பள்ளிக் கல்வித் துறை எந்த வகையில் ஆன்லைன் கல்வி திட்டத்தை செயல்படுத்தப் போகிறது என்பதை அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.