புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் செப்டம்பரில் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆன்லைனில் ஆலோசனை
தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் ஞாயிறு மாலை ஜும் செயலி வாயிலாக நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். குழுவில் அங்கம் வகிக்கும் அனைத்து துறைச் சங்கத் தலைவர்களும் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.
கடந்த கால நடவடிக்கைகள் தொடர்பான விரிவான அறிக்கையை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன் முன்வைத்தார். மாநில நிதிக் காப்பாளர் வெங்கடேசன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
தற்செயல் விடுப்பு
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 7-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த இயக்கத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் கையெழுத்து வாங்க முடிவு செய்யப்பட்டது.
வரும் செப்டம்பர் 4-வது வாரத்தில் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
நிறைவில் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறை தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.