வேளாண் மசோதாக்கள் ராஜ்யசபாவில் நிறைவேறியது…

வேளாண் மசோதாக்கள் ராஜ்யசபாவில் நிறைவேறியது…

விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதிகள்) சட்ட மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா 2020, அத்தியாவசிய பொருள்கள் திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் லோக் சபாவில் அண்மையில் நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் ஹவுர் சில நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதிகள்) சட்ட மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா 2020 ஆகிய 2 மசோதாக்களை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ராஜ்ய சபாவில் நேற்று தாக்கல் செய்தார்.

வேளாண் மசோதாக்கள் தொடர்பாக ராஜ்ய சபாவில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
வேளாண் மசோதாக்கள் தொடர்பாக ராஜ்ய சபாவில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

அமைச்சர் விளக்கம்

அப்போது அவர் அவையில் பேசியதாவது:
புதிய மசோதாக்கள் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நாட்டின் எந்த மூலையிலும் விற்பனை செய்ய முடியும். அவர்கள் விரும்பும் விலைக்கு வேளாண் விளைபொருட்களை விற்க முடியும்.

இந்த மசோதாக்கள் மூலம் விவசாயிகளுக்கு 3 நாட்களுக்குள் விளைபொருட்களுக்கான பணத்தை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வயலில் விதை விதைக்கும்போதே விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்ய முடியும். இவை வரலாற்று சிறப்புமிக்க மசோதாக்கள் ஆகும்.

குறைந்தபட்ச ஆதார விலை கொள்முதல் திட்டம் தொடரும். அந்த திட்டம் நிறுத்தப்படாது. இதுதொடர்பாக பரப்பப்படும் பொய்களை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதாக்களை நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தின.

பாஜக எம்.பி. பூபேந்தர் யாதவ்
பாஜக எம்.பி. பூபேந்தர் யாதவ்

காங்கிரஸ், பாஜக எம்.பி.

காங்கிரஸ் எம்.பி. பிரதாப் சிங் பஜ்வா பேசும்போது, “இந்த வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு விதிக்கப்படும் மரண தண்டனை போல அமைந்துள்ளன. முந்தைய சட்டம், குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தில் திருத்தம், மாற்றங்கள் செய்வதை விவசாயிகள் விரும்பவில்லை.

பாஜகவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தலம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிராக கடந்த 3 மாதங்களாக குரல் எழுப்பி வருகிறார். அவரது கருத்துகளை கூட மத்திய அரசு கேட்க மறுக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

பாஜக எம்.பி. பூபேந்திர யாதவ் பேசும்போது, “கடந்த 60 ஆண்டுகளாக விவசாயிகளின் வருவாய் குறைந்து வருகிறது. அதிகம் பேசும் காங்கிரஸ், விவசாயிகளின் நலனுக்காக எதையும் செய்யவில்லை.

காங்கிரஸ் கட்சி விவசாயிகளை வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறது. அவர்களின் நலனுக்காக சிந்திப்பது கூட இல்லை. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாக்கள் வேளாண் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். ” என்று தெரிவித்தார்.

திமுக எதிர்ப்பு

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராத் பேசும்போது, “வேளாண் மசோதாக்கள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த வேண்டும். இந்த மசோதாக்கள் மூலம் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும். விவசாயிகளின் தற்கொலை தடுக்கப்படும் என்று மத்திய அரசால் உத்தரவாதம் அளிக்க முடியுமா? குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் நிறுத்தப்படுவதாக வெளியான தகவல் வதந்தி என்று பிரதமர் கூறுகிறார்.

இது வதந்தி என்றால் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் ஹவுர் எதற்காக பதவியை ராஜினாமா செய்தார்” என்று கேள்வி எழுப்பினார்.

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராத்
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராத்

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையன் பேசும்போது, “வரும் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று மத்திய அரசு உறுதி அளித்தது.

இப்போதைய நிலையை கணக்கிட்டால் வரும் 2028 வரையில் கூட விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக வாய்ப்பில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக அள்ளி வீசியது. அந்த வாக்குறுதிகள் காற்றில் பறக்கின்றன. ” என்று குற்றம் சாட்டினார்.

சமாஜ்வாதி எம்.பி. ராம் கோபால் யாதவ் பேசும்போது, “வேளாண் மசோதாக்கள் குறித்து எந்தவொரு விவசாய சங்கங்களுடனும் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்கவில்லை.

கடந்த 6 ஆண்டுகளாக வேளாண் துறை வளர்ச்சி 6 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. யாருடைய ஆலோசனைகளையும் கேட்காமல் மசோதாக்களை நிறைவேற்றுவதில் மட்டுமே மத்திய அரசு குறியாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் பேசும்போது, “கார்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது. இந்த வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை அழித்துவிடும்” என்று தெரிவித்தார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு

ஆந்திராவின் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஹாரின் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவித்தன.

ஒஸ்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. விஜய் சாய் ரெட்டி பேசும்போது, கடந்த கால ஆட்சிகள் இடைத்தரகர்களுக்கு சாதகமாக செயல்பட்டன. தற்போதைய மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக மசோதாக்களை கொண்டு வந்துள்ளது” என்று தெரிவித்தார்.

கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் எம்.பி. ராகேஷ் பேசும்போது, “இந்த வேளாண் மசோதாக்கள், விவசாயிகளுக்கான கரோனா நிவாரண மசோதாக்கள் என்று மத்திய அரசு கூறுகிறது. உண்மையில் இந்த மசோதாக்கள் கார்பரேட் நிறுவனங்களுக்கான நிவாரண மசோதாக்கள் ஆகும்.

கார்பரேட் நிறுவனங்களிடம் பேரம் பேசி விவசாயிகள் நல்ல விலை பெறுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை. மேலும் வேளாண் துறை மாநில அரசுகள் சார்ந்தது. ஆனால் மத்திய அரசின் மசோதாக்கள் மூலம் வேளாண் துறை சார்ந்த மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன” என்று குற்றம் சாட்டினார்.

மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2 வேளாண் மசோதாக்களால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் கடும் அமளிக்கு இடையே 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *