7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்தார். 

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆய்வு செய்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு பரிந்துரை அளித்தது.

இந்த பரிந்துரையை ஆய்வு செய்த தமிழக அமைச்சரவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்தது. இதற்கான சட்ட மசோதா கடந்த செப்டம்பரில் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கடந்த செப். 18-ம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்தார். இதைத் தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வியாழக்கிழமை பிறப்பித்தது.

இந்நிலையில்,  மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *