முதல்கட்டமாக 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி

முதல்கட்டமாக 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’, அகமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடில்லா நிறுவனம் தயாரித்துள்ள ‘ஜைகோவ் டி’ , புனேவின் செரம் இன்ஸ்டிடியூட் தயாரித்து வரும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் ரஷ்ய அரசு நிறுவனம் தயாரித்துள்ள ‘ஸ்புட்னிக் வி’ என்ற கரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் விற்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 

கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகளை வாங்கி முன்னுரிமை அடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி கொரோனா நோயாளிகள், வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் முன்கள பணியாளர்கள், முதியோர் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் முதலில் தடுப்பூசி போடப்பட உள்ளது. 

இதுதொடர்பான வரைவு அறிக்கையை நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான குழு தயார் செய்துள்ளது. இதன்படி முதல்கட்டமாக 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

அதாவது 11 லட்சம் மருத்துவர்கள், 8 லட்சம் ஆயுர்வேத மருத்துவர்கள், 15 லட்சம் செவிலியர்கள், 7 லட்சம் ஏஎன்எம் பணியாளர்கள், 10 லட்சம் ஆஷா பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மருத்துவமனை பாதுகாவலர்கள் என 8 லட்சம் பேர், 45 லட்சம் காவலர்கள், 15 லட்சம் ராணுவ வீரர்கள், 1.5 லட்சம் உள்ளாட்சி ஊழியர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. 

முதியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அச்சுறுத்தல் அதிகம் உள்ளதால் 50 வயதுக்கு மேற்பட்ட 26 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இவர்கள் தவிர இளம் வயதினரில் நீரழிவு, நுரையீரல், சிறுநீரக பிரச்சினை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பான பட்டியல் அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் தொடக்கத்தில் இறுதி செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *