சென்னை கொரட்டூரில் கந்துவட்டிக் கொடுமையால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் அவர் எழுதிய கடித்தத்தால் தண்டல் தியாகராஜன், பிரகாஷ் என இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
சென்னை கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குயிருப்பு 61-வது தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (43). பத்தாம் வகுப்பு வரை படித்த செல்வகுமார், கொரட்டூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் செல்வம் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வந்தார்.

கொரட்டூர் ரயில் நிலைய சுரங்க பாதை பணி, கொரோனா ஊரடங்கு ஆகியவை காரணமாக கடையில் வியாபாரம் இல்லை. அதனால் கொரட்டூர் பகுதியில் பால் டீலராகவும் இருந்தார். தொழிலை விரிவுப்படுத்த கொரட்டூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த பரசுராமன் என்பவரிடம் 4 லட்சம் ரூபாயும் கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த தண்டல் தியாகராஜன் என்பவரிடம் 11 லட்சம் ரூபாயும் கடனாக வாங்கியிருந்தார். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இல்லை. இதையடுத்து செல்வகுமாருக்கு கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொல்லைக் கொடுத்தனர்.
வீட்டையும் கடையையும் எழுதித்தரும்படி பரசுராமனின் மகன் பிரகாஷ், தியாகராஜன் ஆகியோர் கேட்டனர். அதனால் மனமுடைந்த செல்வகுமார், நேற்று கடைக்கு வழக்கம் போல வந்தார். பிறகு கடைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கொரட்டூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தற்கொலை செய்வதற்கு முன் செல்வகுமார் எழுதிய கடிதம் போலீஸாரிடம் சிக்கியது. அதில் என் சாவுக்கு பிரகாஷ், தியாகராஜன் ஆகியோர்தான் காரணம் என குறிப்பிட்டிருந்தார். மேலும் பரசுராமனிடம் வாங்கிய 4 லட்சம் ரூபாய் கடனுக்கு இதுவரை 10 லட்சம் ரூபாயும், தியாகராஜனிடம் வாங்கிய 11 லட்சம் ரூபாய் கடனுக்கு 33 லட்சம் ரூபாயும் கொடுத்திருப்பதாக எழுதியுள்ளார். இதையடுத்து பிரகாஷையும் தியாகராஜனையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.