அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குழு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் குழு பரிசோதனை முறையை செயல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் சளி மாதிரிகள் ஒரே நேரத்தில் சேர்த்து சோதிக்கப்படும். இதில் நெகட்டிவ் என்று முடிவு வந்தால் யாருக்கும் வைரஸ் பாதிப்பில்லை என்பது உறுதி செய்யப்படும். ஒருவேளை பாசிட்டிவ் என்று முடிவு வந்தால் அந்த குழுவை சேர்ந்தவர்களின் சளி மாதிரிகள் தனித்தனியாக பரிசோதிக்கப்படும்.
இதன்மூலம் நேரம் மிச்சமாகும், செலவு குறையும். எனினும் கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே கொத்து கொரோனா பரிசோதனை சாத்தியம். வைரஸ் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் தனித்தனியாகவே பரிசோதனை செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.