தடுப்பூசி போட்டு கொண்ட அமைச்சருக்கு கொரோனா

 தடுப்பூசி போட்டுக் கொண்ட ஹரியாணா அமைச்சருக்கு அனில் விஜ்ஜுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் , இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ‘கோவேக்ஸின்’ என்ற பெயரில் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியின் 2 கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

கடந்த நவம்பர் 16-ம் தேதி கோவேக்ஸின் தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை தொடங்கியது.  நாடு முழுவதும் 22 நகரங்களில் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதில் 26,000 தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.  

ஹரியாணாவின் அம்பாலா கன்டோன்மென்ட் அரசு மருத்துவமனையிலும் கோவேக்ஸின் தடுப்பூசி பரிசோதனை நடைபெறுகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த நவம்பர் 20-ம் தேதி ஹரியாணாவின் சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் (வயது 67) தன்னார்வலராக பங்கேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதனை அவர் ட்விட்டர் வாயிலாக வெளியிட்டார்.

“எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அம்பாலா மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். என்னோடு தொடர்பில் இருந்தவர்கள், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. “கோவேக்ஸின் தடுப்பூசி 2 முறை போட வேண்டிய தடுப்பூசி ஆகும். அமைச்சர் அனில் விஜ்ஜுக்கு முதல் தடுப்பூசி மட்டுமே போடப்பட்டுள்ளது. இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு குறிப்பிட்ட நாட்கள் கழித்த பிறகே உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகும்” என்று சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனமும் விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. 

“கோவேக்ஸின் தடுப்பூசி, அடுத்தடுத்து  2 முறை போட வேண்டிய தடுப்பூசியாகும். முதல் தடுப்பூசி போட்ட பிறகு 28 நாட்கள் கழித்து இரண்டாவது தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். அதன்பின் 14 நாட்களுக்குப் பிறகே உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

கொரோனா தடுப்பூசி பரிசோதனையின்போது 50 சதவீதம் பேருக்கு உண்மையான தடுப்பூசி போடப்படும். மீதமுள்ள 50 சதவீதம் பேருக்கு பாசாங்கு (டம்மி) தடுப்பூசி போடப்படும். யாருக்கு உண்மையான தடுப்பூசி போடப்பட்டது?  யாருக்கு பாசாங்கு தடுப்பூசி போடப்பட்டது என்பது நிறுவனத்துக்கோ, தன்னார்வலர்களுக்கோ தெரியாது. இதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு குழுவுக்கு மட்டுமே முழுமையான விவரங்கள் தெரியும்” என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *