கடத்தல் கும்பலைப் பிடிக்க உயிரைப் பணயம் வைத்த தலைமைக் காவலர் – மெய்சிலிர்க்க வைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள்

சென்னை எழும்பூர் மியூசியம் அருகே வேகமாக சென்ற காரின் முன்பகுதியில் ஒருவர் தொங்கிக் கொண்டிருந்தார். அவர், ஹெல்ப், ஹெல்ப் என்று கூறியதைக் கேட்ட அவ்வழியாக சென்றவர்கள் காரை மடக்கிப்பிடித்தனர்.

அப்போதுதான் கடத்தல் கும்பலைப் பிடிக்க தலைமைக் காவலர் ஒருவர், உயிரைப் பணயம் வைத்த தகவல் தெரிந்தது.மெய்சிலிர்க்க வைக்கும் தலைமைக் காவலர் சரவணன், ஜேம்ஸ்பாண்டு போல காரில் பயணித்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகியிருக்கிறது. என்ன நடந்தது என்பதை இந்த வீடியோவில் விரிவாகப் பார்ப்போம்.

சென்னை சேத்துப்பட்டு ஹரிங்கடன் ரோடு, 2-வது அவென்யூவைச் சேர்ந்தவர் மூசா (73). இவர் தமிழக காவல்துறையில் எஸ்.ஐ பணியாற்றியவர். தற்போது, செம்மரம் பிசினஸ் செய்து வருகிறார். போலீஸரால் பிடிக்கப்படும் செம்மரங்களை ஏலத்தின் எடுக்கும் மூசா, அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்தத் தொழிலில் மூசாவின் மூத்த மகன் பஷீரும் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 3ம் தேதி காலை 10 மணியளவில் மூசா வீட்டிலிருந்தபோது அங்கு வந்த பிரபல ரவுடி அறுப்புக்குமார், அவரின் கூட்டாளிகள் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். பின்னர் அறுப்புக்குமார், மூசாவை போரூரில் உள்ள போதை மறுவாழ்வு இல்லத்தில் அடைத்து வைத்தார்.

அதன்பிறகு மூசா மூலமாக அவரின் இளைய மகன் செரீப்பை செல்போனில் தொடர்பு கொண்டு 3 கோடி ரூபாய் கேட்க வைத்தனர். அப்போது உடனடியாக 3 கோடி ரூபாயை கொடுக்க முடியாது என்று ஷெரீப் கூறியதும் ஒன்றரைக் கோடி ரூபாய் கேட்டனர். இவ்வளவு பணத்தை ஒரே நேரத்தில் கொடுத்தால் வருமான வரி பிரச்னை வரும் என்று ஷெரீப் மறுத்தார். இதையடுத்து மூசா மூலம் நடந்த டீலிங்கில் 50 லட்சம் ரூபாய் என பேரம் பேசி முடிக்கப்பட்டது.

பணத்தை ஷெரீப் ஏற்பாடு செய்வதாகக் கூறி போன் இணைப்பைத் துண்டித்தார். பிறகு, மூசா கடத்தப்பட்ட தகவலை அவரின் அண்ணன் பஷீரிடம் ஷெரீப் தெரிவித்தார். பஷீர், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள உத்தண்டியில் குடியிருந்து வருகிறார். உடனே அவர், தன்னுடைய அப்பாவைக் காணவில்லை என கானாத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன்பேரில் உதவி கமிஷனர் சுதர்சன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இந்த நிலையில் கடத்தல் கும்பல் மீண்டும் ஷெரீப்பிற்கு போன் செய்து பணத்தை தாம்பரம் பகுதிக்கு கொண்டுவரும்படி கூறியது.

மூசாவைக் காணவில்லை என பஷீர் காவல் நிலையத்தில் புகாரளித்ததும் ஷெரீப்பை கடத்தல் கும்பல் தொடர்பு கொள்வதை நிறுத்தியது. அதன்பிறகு மூசாவின் நண்பரான மண்ணடியைச் சேர்ந்த ஒருவரை கடத்தல் கும்பல் செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டது. அப்போது அவர், உடனடியாக 50 லட்சம் ரூபாயை ஒரே நாளில் ரெடி பண்ண முடியாது.

25 லட்சம் ரூபாயை தருகிறேன் என்று தெரிவித்தார். அதன்படி 25 லட்சம் ரூபாயை புழல் பகுதிக்கு கொண்டு வரும்படி கடத்தல் கும்பல் கூறியது. அதன்படி மூசாவின் நண்பரான மண்ணடியைச் சேர்ந்தவர் தனக்குத் தெரிந்த ஒருவரிடம் 25 லட்சத்தை கொடுத்து புழலுக்கு செல்லும்படி கூறினார். இந்தச் சமயத்தில் மண்ணடி நபருக்கு போன் செய்த கடத்தல் கும்பல், சென்னை அம்பத்தூருக்கு வாருங்கள் எனக் கூறியது.

அடுத்த சில நிமிடத்தில் அம்பத்தூர் வேண்டாம், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே வா என போன் இணைப்பை துண்டித்தது. இடத்தை அடிக்கடி மாற்றிய விவரங்களை மண்ணடி நபர், காவல் துறையினருக்கு ரகசியமாக தெரிவித்து வந்தார். போலீஸாரும் செல்போன் சிக்னல் மூலம் கடத்தல் கும்பலைக் கண்காணித்து வந்தது.

இதையடுத்து பணத்தைக் கொடுத்து மூசா மீட்க போலீஸார் முடிவு செய்தது. அதே நேரத்தில் மூசா மீட்கப்பட்டதும் பணத்தையும் கடத்தல் கும்பலையும் பிடிக்க காவல்துறை ரகசியமாக இன்னொரு ஆபரேஷனை நடத்த திட்டமிட்டது.

இதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலின் உத்தரவின்பேரில் இணை கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திக்கேயனின் தலைமையில் உதவி கமிஷனர்கள் சுதர்சன், ரமேஷ், இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட், துணை கமிஷனர் கார்த்திக்கேயனின் தனிப்படையிலிருக்கும் தலைமைக் காவலர் சரவணக்குமார், காவலர் மகேஷ் ஆகியோர் ரகசியமாக களமிறங்கினர். பணத்துடன் சென்ற நபரை மப்டியில் தலைமைக் காவலர் சரவணக்குமாரும், காவலர் மகேஷிம் கண்காணித்தனர்.

அப்போது பணத்தைக் கொண்டு சென்றவரைத் தொடர்பு கொண்ட கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர், சாலை ஓரத்தில் நிற்கும் ஒருவரின் அடையாளங்களைக் குறிப்பிட்டு அவரிடம் பணத்தைக் கொடுக்கும்படி கூறினர். அதன்படி பணத்தைக் கொடுத்ததும் அந்த நபர், பைக்கில் காத்திருந்த ஒருவரிடம் பணத்தைக் கொடுத்தார்.

இந்தச் சமயத்தில் வேகமாக ஒரு கார் வந்து பைக்கின் அருகில் நின்றது. அங்கிருந்து இறங்கியவர் பிரபல ரவுடி அறுப்புக்குமார். அவர் பணத்தை வாங்கிக் கொண்டு, காரிலிருந்த தொழிலதிபர் மூசாவைக் கீழே இறக்கி விட்டார்.

பின்னர் கார் அங்கிருந்து மின்னல் வேகத்தில் எழும்பூர் கோஆப்டெக்ஸ் வழியாக ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையை நோக்கிச் சென்றது. அதைக் கவனித்த மப்டியிலிருந்த தலைமைக் காவலர் சரவணக்குமாரும், மகேஷிம் பைக்கில் காரை பின்தொடர்ந்தனர்.

அப்போது மகேஷ் பைக்கை ஓட்ட பின்னால் சரவணக்குமார் அமர்ந்திருந்தார். மழை பெய்துக் கொண்டிருந்ததால் கோஆப்டெக்ஸ் சிக்னல் வேலை செய்யவில்லை. அதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதில் கடத்தல் கும்பலின் கார் சிக்கிக் கொண்டது. இதுதான் சரியான நேரம் எனக்கருதிய சரவணக்குமாரும் மகேஷிம் பைக்கை விட்டு கீழே இறங்கி காரை சுற்றி வளைத்தனர். டிரைவரின் அருகில் சரவணக்குமார் நின்றுக்கொண்டு கதவைப் பிடித்து இழுத்தார்.

பின்னால் அமர்ந்திருந்த அறுப்புக்குமாரை மகேஷ் பிடித்தார். இந்தச் சமயத்தில் காரை டிரைவர் வேகமாக ஓட்டினார். மகேஷின் பிடியில் அறுப்புக்குமார் சிக்கிக் கொள்ள, பணம் காருக்குள் மாட்டிக் கொண்டது. உடனடியாக சரவணக்குமார், காரின் முன்பகுதிக்கு தாவினார். அப்போது காரின் முன்பகுதியில் போலீஸார் வந்த பைக் சிக்கியது. அதனால் பின்பக்கமாக காரை எடுத்த டிரைவர், மீண்டும் ஆயிரம் விளக்கு நோக்கி ஓட்டினார். அப்போது காரின் முன்பகுதியை பலமாக சரவணக்குமார் பிடித்துக் கொண்டார்.

காரின் முன்பகுதியில் தொங்கியபடி கண்ணாடியை உடைக்க முயன்றார். அதைப்பார்த்த டிரைவர், அந்தப்பகுதியில் உள்ள பாலத்தின் தடுப்புச் சுவரில் காரை மோதினார். அதைப் பார்த்த சரவணக்குமார் கால்களை மடக்கிக் கொண்டு இன்னும் பலமாக பிடித்துக் கொண்டார். அதனால் அவர் கீழே விழவில்லை. அப்போது சரவணக்குமார் சத்தம் போட்டதைக் கேட்ட அவ்வழியாக சென்றவர்கள், விபத்தில்தான் ஒருவர் சிக்கிக் கொண்டார் எனக்கருதி காரை விரட்டினர். அதைப்பார்த்த டிரைவர் இன்னும் வேகமாக ஓட்டி ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தார்.

அப்போது பொதுமக்கள் காரை மடக்கிப்பிடித்தனர். காரை விட்டு கீழே இறங்கிய சரவணக்குமார், டிரைவர் பிரகாஷையும் பணத்தையும் மீட்டார். பிறகு அவர் பொதுமக்களிடம் விவரத்தைக் கூறியதும் கடத்தல் கும்பலைப் பிடிக்க காவலர் ஒருவர் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் செயல்பட்டது தெரியவந்தது. பொதுமக்களில் சிலர் சரவணக்குமாருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இதையடுத்து டிரைவர் பிரகாஷ், 25 லட்சம் ரூபாயை சரவணக்குமார், காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அதன்பேரில் கானாத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பிரபல ரவுடி அறுப்புக்குமார், அவரின் கூட்டாளியான டிரைவர் பிரகாஷ், இந்தக் கடத்தலுக்கு உதவிய போதை மறுவாழ்வு மையத்தை நடத்தி வரும் காந்தி என்பவரின் மனைவி சங்கீதா ஆகியோரைக் கைது செய்தனர். இவர்கள் பயன்படுத்திய கைவிலங்கு, டம்மி துப்பாக்கி, கத்தி, கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். தலைமைக் காவலர் சரவணக்குமாரின் வீர தீர செயலைப் போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *