கேரளாவில் கோரதாண்டவமாடும் மழை

கேரளாவில் மழை கோரதாண்டவமாடி வருகிறது. கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் ஆண்டுக்கு இருமுறை பருவமழை காலம் வருகிறது. அந்த மாநிலத்தில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர், நவம்பரில் வடகிழக்கு பருவமழையும் பெய்கிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை அண்மையில் நிறைவடைந்தது. வடகிழக்கு பருவமழை சீசன் களை கட்ட தொடங்கியுள்ளது.

கடந்த 10-ம் தேதி தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதன்காரணமாக கேரளாவில்  கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கோட்டயம், இடுக்கி மாவட்டங்கள் மோசமான நிலையில் உள்ளன.

கனமழையால் கோட்டயம் மாவட்டத்தின் கூட்டிங்கால், இடுக்கி மாவட்டத்தின் கோக்கையார் பகுதிகளில் கடந்த 16-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 23 பேர் உயிரிழந்தனர். இரு இடங்களிலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கேரளா முழுவதும் கனமழை, நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது
மாநிலம் முழுவதும் 184 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முப்படைகளும் தேசிய, மாநில தேசிய பேரிடர் படைகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
பத்தினம்திட்டா, இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களில் அமைந்துள்ள 10 அணைகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளன. வரும் 24-ம் தேதி வரை கேரளாவில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக 10 அணைகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 8 அணைகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

கனமழை பாதிப்பு தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் திங்கள்கிழமை அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் பினராயி விஜயன் பேட்டியளித்தார்.
“அணைகளை திறப்பது தொடர்பாக நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவின் 81 அணைகளின் நீர்நிலையை பொறுத்து அவர்கள் முடிவு எடுப்பார்கள். பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்.

முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெள்ள அபாய பகுதிகள், நிலச்சரிவு அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுகிறேன்” என்று தெரிவித்தார்.

மாநில வருவாய் துறை அமைச்சர் கே.ராஜன் கூறும்போது, “கனமழையால் பம்பா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சபரிமலையில் வரும் 21-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை” என்று தெரிவித்தார்.

அண்டாவில் மிதந்த புதுமண தம்பதி


கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஆலப்புழாவின் மேலகுட்டநாடு பகுதி முழுவதையும் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. அங்குள்ள கோயிலில் ராகுல், ஐஸ்வர்யா  தம்பதிக்கு திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதியர் அண்டாவை படகாக பயன்படுத்தி வீட்டில் இருந்து கோயிலுக்கு மிதந்து சென்றனர்.
இதுகுறித்து உறவினர்கள் கூறும்போது, “ஆலப்புழா முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. புதுமண தம்பதியை கோயிலுக்கு அழைத்துச் செல்ல படகு கிடைக்கவில்லை. எனவே அண்டாவில் புதுமண ஜோடியை அமரவைத்து பாதுகாப்பாக கோயிலுக்கு அழைத்து சென்று திருமணத்தை நடத்தினோம்” என்று தெரிவித்தனர்.

இடிந்து விழுந்த வீடு


கேரளாவின் கோட்டயம் மாவட்டம் முண்டகயம் பகுதியில் மணிமாலா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அந்த நகரின் ஆற்றங்கரையோரம் கட்டப்பட்டிருந்த வீடு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் வெளியேறிவிட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
கோட்டயம் மாவட்டத்தின் பூஞ்சார் பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பஸ்ஸை பொதுமக்கள் கயிறு கட்டி இழுத்து மீட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *