சென்ட்ரல் வழியாக 40 டன் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எனினும் ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இது பிரம்மாண்ட முனையமாக அமைக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்காக சென்ட்ரலில் பூமிக்கு அடியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேல்பகுதியில் வாகனங்கள் செல்ல இரும்பு தகடுகளால் ஆன தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு கனரக வாகனங்கள் செல்லும்போது இரும்பு தகடு சாலை அடிக்கடி உடைந்து விடுகிறது. வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பள்ளத்தில் கவிழும் கனரக வாகனங்களை மீட்பது பெரும் சவாலாக உள்ளது. எனவே 40 டன் எடை கொண்ட கனரக வாகனங்கள் சென்ட்ரல் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்ட்ரல் பகுதியின் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.