ஹெலிகாப்டரிலிருந்து சீறிப் பாயும் புதிய ஏவுகணை

ஏவுகணைகள் தயாரிப்பில் இந்தியா முன்னோடியாக உள்ளது. உலகிலேயே அதிவேகமாக சீறிப் பாயக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகள் நம்மிடம் உள்ளன. தரையில் இருந்து தரை இலக்கை தாக்கும் பிரித்வி , கடற்படையில் பயன்படுத்தப்படும் தனுஷ் ஏவுகணைகள் இந்தியாவின் பலத்தை உலகுக்கு பறைசாற்றி வருகின்றன.


எல்லாவற்றுக்கும் மேலாக கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி ஏவுகணைகள், வல்லரசு நாடுகளுக்கே சவால் விடுக்கின்றன. இவை 12 ஆயிரம் கி.மீ. தொலைவு வரை சீறிப் பாயக்கூடியவை. அணுகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டவை.

ஒடிசா கடற்கரையில் இருந்து சீறிப் பாய்ந்த துருவஸ்திரா


விண்ணில் சுற்றும் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிடம் மட்டுமே உள்ளன. கடந்த 2019 மார்ச்சில் இந்தியாவும் அந்த மைல் கல்லை எட்டியது. அசாட் என்ற ஏவுகணை மூலம் விண்ணில் சுற்றிய செயற்கைக்கோளை இந்தியா வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியது.


இந்த வரிசையில் ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படும் புதிய ஏவுகணையை மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் (டிஆர்டிஓ) ஒடிசா கடற்கரையில் இன்று சோதனை செய்தது. இந்த ஏவுகணை கடலில் நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை மிக துல்லியமாகத் தாக்கி தூள் தூளாக்கியது.


இன்றைய சோதனையின்போது ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படவில்லை. தரையில் இருந்தே ஏவுகணை செலுத்தப்பட்டது. அடுத்தகட்டமாக ஹெலிகாப்டரில் இருந்து ஏவுகணை செலுத்தப்படும் என்று டிஆர்டிோ தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படும் ஏவுகணை


மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் பாயும் ஹெலிகாப்டர் ஏவுகணைக்கு துருவஸ்திரா என்று பெயரிடப்பட்டுள்ளது. இது 7 கி.மீ. தொலைவு வரையிலுள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும். துருவஸ்திரா ஏவுகணைகள் விரைவில் விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளன.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவில் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி உள்ளிட்ட அதிநவீன ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை சுமார் 500 டன் வரையிலான செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு சுமந்து செல்கின்றன. தேவைப்பட்டால் இந்த ராக்கெட்டுகளையும், நாசகார ஏவுகணைகளாகப் பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *