ஒழுக்கமின்மையால் பிரிந்த மனைவிக்கு கணவரின் ஓய்வூதிய பலன் கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லில் தொழிலாளர் நலத்துறை அதிகாரியாக பணியாற்றிய ஒருவர் கடந்த 2011-ல் இறந்தார். இவர் தனது முதல் மனைவியை நடத்தை சரியில்லை என்று கூறி 1988-ல் விவகாரத்தை செய்தார். 2-வதாக ஒரு திருமணம் செய்தார். 2-வது திருமணம் மூலம் அவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
சட்டப்படி 2-வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் கிடையாது. அதேநேரத்தில் 2-வது மனைவியின் 2 மகள்கள், முதல் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியத்தை பிரித்து வழங்க அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து 2-வது மனைவி சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி டீக்காராமன் அண்மையில் தீர்ப்பு வழங்கினார்.
“2-வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி கிடையாது. நீதிமன்றத்தில் சட்டப்படி பிரிந்து வாழ உத்தரவு பெற்ற முதல் மனைவி, கணவரின் ஓய்வூதியத்தை பெற தகுதியானவர்தான்.
அதேநேரம் ஒழுக்கமின்மையால் பிரிந்த முதல் மனைவி தமிழ்நாடு ஓ்யவூதிய விதிகளின்படி ஓய்வூதியத்தை பெற தகுதியானவர் கிடையாது. இதனால் ஓய்வூதியத்தை முதல் மனைவி, 2 மகள்களுக்கு பிரித்து வழங்கும் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
ஓய்வூதியப் பலன்கள் அனைத்தும் மனுதாரரின் 2 மகள்களுக்கு சரிசமமாகப் பிரித்து வழங்க வேண்டும்” என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.