திருவள்ளூர் மாவட்டத்தில், நடமாட முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளின் வீடுகளுக்கு சென்னை சிகிச்சை அளிக்கும் நடமாடும் மருத்துவ வாகன திட்டத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கடந்த திங்கள்கிழமை திருவள்ளூரில் தொடங்கி வைத்தார். இதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
“திருவள்ளூர் மாவட்டத்தின் 14 ஒன்றியங்களில் நடமாட முடியாத நிலையில் 2,608 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடமாடும் மருத்துவ வாகன திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக கடம்பத்தூர், பூந்தமல்லி, எல்லாபுரம், மீஞ்சூர், பள்ளிப்பட்டு ஆகிய 5 ஒன்றியங்களில் நடமாடும் மருத்துவ வாகன திட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், உதவியாளர்கள், தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளன. இந்த திட்டம் அனைத்து ஒன்றியங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
படுக்கையில் உள்ளோர், மருத்துவமனைக்கு செல்ல முடியாதோர், ஆம்புலன்ஸின் ஏற்ற முடியாதோர் 98403 27626 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால், வீடுகளுக்கே வந்து சிகிச்சை அளிக்கப்படும்” என்று அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
திட்ட தொடக்க விழாவில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.