பிரிட்டனின் காலனியாக இருந்த ஹாங்காங் கடந்த 1997 ஜூலை 1-ம் தேதி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ‘ஒரு தேசம், 2 அமைப்புகள்’ என்ற முறையில் ஹாங்காங் செயல்படுகிறது. ஆனால் ஹாங்காங் மக்களின் சுதந்திரத்தை சீனா படிப்படியாக பறித்து வருகிறது.
கடந்த ஜூன் 30-ம் தேதி ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இந்த சட்டத்தை எதிர்த்து ஹாங்காங் முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்றன. ஹாங்காங்கை சேர்ந்த ‘ஆப்பிள் டெய்லி’ நாளிதழில் போராட்டம் தொடர்பான செய்திகள் அதிகம் வெளியாகின.

இந்த பின்னணியில், போராட்டத்தை ஆதரித்த குற்றச்சாட்டின்பேரில், ‘ஆப்பிள் டெய்லி’ நாளிதழின் நிறுவனர் ஜிம்மி லாய் இன்று கைது செய்யப்பட்டார். புதிதாக கொண்டு வரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரும் தொழிலதிபரான ஜிம்மி லாயை போலீஸார் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர். ‘ஆப்பிள் டெய்லி’ நாளிதழ் அலுவலகத்திலும் காலை முதல் பல மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. ஜிம்மி லாய் கைதுக்கு சர்வதேச தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறும்போது, “ஹாங்காங்கின் சுதந்திரத்தை சீனா பறிக்கிறது. சுதந்திரத்துக்காக போராடுபவர்களை கைது செய்கிறது. சர்வாதிகாரத்தை நிலைநாட்ட முயல்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, “ஜிம்மி லாய் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது” என்று விமர்சித்துள்ளார்.
ஹாங்காங்கில் இன்று ஒரே நாளில் ஜிம்மி லாய் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில், ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல்வேறு நாடுகள், அமைப்புகள் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.