கவரிங் நகைகள் கொள்ளை – தங்க நகைகள் தப்பிய ருசிகரம்

தாம்பரத்தில் வீட்டின் பீரோவிலிருந்து 100 சவரன் கவரிங் நகைகள், 10,000 ரூபாய், ஒன்றரை சவரன் தங்க நகைகள், பட்டுபுடவைகளை கொள்ளை அடித்துள்ளனர். ஆனால் 15 சவரன் தங்க நகைகள் கொள்ளையர்களிடமிருந்து தப்பியுள்ளது.

இந்த ருசிகர சம்பவம் குறித்த செய்திதொகுப்பு இது!

சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர், தமிழ்பூங்கா தெருவைச் சேர்ந்தவர் ஜீவானந்தம்( வயது35) இவர் சேலையூரில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 15-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள மாமியார் வீட்டுக்கு அவர் சென்றார்.

அதனால் அவரின் வீடு தொடர்ந்து 2 நாள்கள் பூட்டியே இருந்தது. இந்தநிலையில் ஜீவானந்தத்தின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த அந்தத் தெருவைச் சேர்ந்தவர்கள் வீட்டில் கொள்ளை நடந்ததை உறுதிப்படுத்தினர்

கவரிங் நகைகள் கொள்ளை நடந்த தெரு
கவரிங் நகைகள் கொள்ளை நடந்த தெரு

. பின்னர் இதுகுறித்து ஜீவானந்ததின் செல்போனில் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தனர். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஜீவானந்தம், ஈக்காட்டுதாங்கலில் இருந்து இரும்புலியூருக்கு அவசர அவசரமாக வந்தார். வீட்டின் க்ரீல் கேட் மற்றும் முன்பக்க மரக்கதவு ஆகியவை உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டுக்குள் சென்றபோது பொருள்கள் சிதறிக்கிடந்தன. வீட்டிலிருந்த மூன்று பீரோக்களில் 2 பீரோக்கள் திறந்திருந்தன. அதனால் பீரோவிலிருந்த தங்க நகைகள் கொள்ளை போயிருக்கும் என ஜீவானந்தம் கருதினார்.

கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும் என்பதால் ஜீவானந்தம், பீரோவில் என்னென்ன கொள்ளை போனது என்று பார்க்கவில்லை.

சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் ஜீவானந்தம் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் கொள்ளை நடந்த வீட்டுக்கு வந்தனர்.

கொள்ளை நடந்த தெரு
கொள்ளை நடந்த தெரு

அவர்களுடன் கைரேகை நிபுணர்களும் வந்திருந்தனர். பீரோக்கள், கதவுகளில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

அப்போது ஒரு பீரோவில் நகை பெட்டி ஒன்று இருந்தது. அதிலிருந்த நகைகள் அனைத்தும் தங்கம்.

அதில் மொத்தம் 15 சவரன் தங்க நகைகள் இருந்தன. தங்க நகைகள் கொள்ளைபோகவில்லை என்ற தகவல் தெரிந்தது; ஜீவானந்தம் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். ஜீவானந்தம் வீட்டில் மூன்று பீரோக்கள் உள்ளன.

அதில் ஒரு பீரோவில் குழந்தைகள் அணியும் கவரிங் நகைகள், 3 பாக்ஸ்களில் இருந்துள்ளன. அதை கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். 2-வது பீரோவில் பட்டு புடவைகள் இருந்தன. அதையும் கொள்ளையர்கள் எடுத்துள்ளனர். மேலும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10,000 ரூபாய் மற்றும் ஒன்றரை சவரன் தங்க நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

இருட்டில் இன்னொரு பீரோ இருந்துள்ளது. அது கொள்ளையர்களின் கண்களில் தெரியவில்லை. அதனால் அதற்குள் இருந்த 15 சவரன் தங்க நகைகள் கொள்ளைச் சம்பவத்திலிருந்து தப்பியுள்ளது. 100 சவரன் கவரிங் நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள், 15 சவரன் தங்க நகைகளை விட்டுச் சென்றுள்ளனர். கொள்ளையர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *