பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராதனா ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது வீட்டில் பணியாற்றிய 30 ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மும்பையில் உள்ள அமிதாப்பின் 4 பங்களாவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். ஐஸ்வர்யா ராயும் 8 வயது குழந்தை ஆராதனாவும் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேரும் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.
சாமானிய மக்கள் வேலைக்காகவும், அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களை கொரோனா வைரஸ் மிக எளிதாக தொற்றுகிறது.
ஆனால் அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட உயர் வகுப்பினருக்கு வைரஸ் எப்படி தொற்றியது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது.
இதுகுறித்து பாலிவுட் வட்டாரங்கள் கூறும்போது, “அமிதாப் பச்சன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கான படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு முடிந்த பிறகு அமிதாப்பை, ஐஸ்வர்யா ராய் காரில் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அமிதாப் மூலமாக ஐஸ்வர்யா ராயை வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கள் இருவர் மூலமாக அபிஷேக் பச்சன், குழந்தை ஆராதனா, ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளன.