1993 டு 2020 வரை கடந்து வந்த பாதை – ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸை உருவாக்கிய தமிழக ஐபிஎஸ் அதிகாரி

ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பை 1993-ம் ஆண்டு ராமநாதபுரத்தில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி பிரதிப் வி பிலிப் என்பவர்தான் முதலில் தொடங்கினார். பின்னர் அந்த அமைப்பின் செயல்பாடுகள் திருப்தியளித்ததால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்தார்.


சாத்தான்குளம் இரட்டைக் கொலை சம்பவத்துக்குப்பிறகு ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பிற்கு எதிராக கருத்துக்கள், விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. தங்களை காவலர்களாகவே கருதிய ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பில் உள்ளவர்கள் லத்தியைக் கையில் பிடித்ததோடு அதிகாரத்தையும் கையில் எடுத்ததே இந்த அமைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் நேர்மையான காக்கிகள்.

ராமநாதபுரத்தில் தொடக்கம்


உண்மையில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பு, தமிழக காவல் துறைக்கு உறுதுணையாக இருந்து வந்தது என்பதை மறுக்க முடியாது. ஏனெனில் காவல் நிலையங்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒர் இணைப்பை இந்த அமைப்பு உருவாக்கியது. அந்த நல்ல எண்ணத்தில்தான் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு 1993-ம் ஆண்டு ராமநாதபுரத்தில் முதல்முறையாக தொடங்கப்பட்டது.


அப்போது அங்கு பிரதிப் வி பிலிப், எஸ்.பி-யாக பணியாற்றிக் கொண்டிருந்தார். ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே கடத்தலுக்கு பெயர் போனது. ஏனெனில் இலங்கைக்கு கடல் வழியாக கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அந்த மாவட்டத்தில் நடந்து வந்தது. அப்போதெல்லாம் இந்தளவுக்கு தகவல் தொழில்நுட்ப வசதி கிடையாது.

போலீஸ் இன்பார்மர்கள்

அதனால், ஒரு வழக்கை போலீஸ் விசாரிக்க வேண்டும் என்றால் ஆங்காங்கே போலீஸ் இன்பார்மர்கள் ரகசியமாக காவல் துறை வைத்திருக்கும். அவர்கள்தான் வழக்கு விசாரணைக்கு உறுதுணையாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இருக்கும் தொடர்பு மற்றவர்களுக்கு தெரியாது.


மன்னர் காலத்தில் இருந்த ஒற்றர்படைதான் இன்றைய போலீஸ் இன்பார்மர்கள் எனக் கூறலாம். காவல் துறையினருக்கு வரும் ரகசிய தகவல்கள் அடிப்படையில் குற்ற சம்பவங்கள், சட்ட ஒழுங்கு பிரச்னைகள் முன்கூட்டியே தடுக்கப்பட்டன. இந்தச் சூழலில் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி பிரதிப் வி பிலிப், காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஒரு அமைப்பை ஏற்படுத்த திட்டமிட்டார்.

ஜெயலலிதா ஆலோசனை

அந்த அமைப்புக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது அவரின் எண்ணத்தில் உதயமானதுதான் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ். உடனே அந்தப் பெயரை வைத்து அமைப்பை சிறப்பாக செயல்பட வைத்தார்.


ராமநாதபுரத்தில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்தது. அதுகுறித்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கும் இந்தத் தகவல் சென்றது. இந்த அமைப்பை ஏன் தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தக்கூடாது என காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு 1994-ம் ஆண்டு ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு தமிழகம் முழுவதும் செயல்படத் தொடங்கியது.

சர்ச்சை, விமர்சனங்கள்


இந்த அமைப்பில் சேருபவர்கள் அனைவரும் தன்னார்வலர்கள். அதனால் அவர்களுக்கு எந்தவித சீருடையும் கிடையாது. மேலும் சம்பளமும் கிடையாது. ஆரம்பத்தில் சிறப்பாகச் செயல்பட்ட இந்த அமைப்பு, சர்ச்சையிலும் சிக்கத் தொடங்கியது.

அதற்கு இந்த அமைப்பில் உள்ளவர்களில் சிலர் தங்களை காவலர்களாகவே கருதி, சட்டத்தையும் லத்தியையும் கையில் எடுத்ததுதான் காரணம். ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களால் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துவரப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டனர். லத்தி பிரயோகமும் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு எதிராக விமர்சனங்கள் வெளியாகின.

தற்காலிக தடை

இருப்பினும் காவல் துறையின் பணிக்கு உதவியாக இருந்ததால் அந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
ஆண்கள் மட்டுமே இந்த அமைப்பில் இருந்து வந்த சூழலில் காஞ்சிபுரத்தில் எஸ்.பியாக இருந்த சாமுண்டீஸ்வரி, பெண்களுக்கும் இந்த அமைப்பில் வாய்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இவ்வாறு சிறப்பாக செயல்பட்டு வந்த ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு, சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்துக்குப் பிறகு சர்ச்சைக்குள் சிக்கி அதற்கு தற்காலிக தடையையும் பிறப்பிக்க வழிவகுத்துள்ளது.


தமிழகத்தில் திருச்சி, கரூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸிக்கு தடை விதிக்கப்பட்டாலும் சென்னையில் இந்த அமைப்புக்கு தடை பிறப்பிக்கப்படவில்லை என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸிக்கு தமிழகத்தில் சில மாவட்டங்களில் 2020-ல் தற்காலிக தடைபிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்த அமைப்பைத் தொடங்கிய பிரதிப் வி பிலிப் தற்போது சிபிசிஐடியில் டிஜிபியாக பணியாற்றி வருகிறார். ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு, டிஜிபி பிரதிப் வி பிலிப் ஐபிஎஸ் அதிகாரிக்கு விருதுகளை வாங்கிக் கொடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *