திரிணமூல் அபார வெற்றி பெற்றது எப்படி?

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் எவ்வாறு அபார வெற்றி பெற்றது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இதில் 292 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.  இரு தொகுதிகளில் வேட்பாளர்கள் உயிரிழந்ததால் அந்த தொகுதிகளில் வரும் 16-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இடதுசாரிகள்-காங்கிரஸ்-இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆகியவை கூட்டணி அமைத்து 3-வது அணியாக போட்டியிட்டன.

ஆளும் திரிணமூல் சார்பில் 291 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். மீதமுள்ள 3 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன.

எதிரணியில் பாஜக 293 தொகுதிகளில் களம் இறங்கியது. கூட்டணி கட்சிக்கு ஓரிடம் ஒதுக்கப்பட்டது. மூன்றாவது அணியில் இடதுசாரி கட்சிகள் 165, காங்கிரஸ் 92, இந்திய மதச்சார்பற்ற முன்னணி 37 தொகுதிகளில் போட்டியிட்டன.

கடந்த மார்ச் 27 முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆரம்பத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸும் பாஜகவும் சமபலத்தில் இருந்தன.

அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றது. இறுதியில் திரிணமூல் காங்கிரஸ் 213 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.

எனினும் நந்திகிராம் தொகுதியில் முதல்வரும் அந்த கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தோல்வியை தழுவினார்.  

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக 77 இடங்களை கைப்பற்றியது. தேர்தலுக்கு முன்பாக திரிணமூலில் இருந்து பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலானோர் தோல்வியை தழுவினர்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 32 எம்எல்ஏக்கள் இருந்தனர்.

மேற்குவங்கத்தில் 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட்டுகளுக்கு தற்போது ஓரிடம்கூட கிடைக்காதது பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல், காங்கிரஸ் கூட்டணி 228 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் தனித்துப் போட்டியிட்டு 211 தொகுதிகளைக் கைப்பற்றியது. தற்போது 3-வது முறையாக 214 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

பிரசாந்த் கிஷோர் வியூகம்

பிரசாந்த் கிஷோர் வியூகம் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸுன் தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஒரு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் ஆலோசகராக இருந்த அவர் ஆரம்பம் முதலே நேர்த்தியாக காய்களை நகர்த்தினார்.

திரிணமூல் அபார வெற்றி
பிரசாந்த் கிஷோர்

கடந்த மார்ச் 10-ம் தேதி நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அவரது காலில் காயம் ஏற்பட்டது.

“காரில் ஏற முயன்றபோது நான்கைந்துபோர் தள்ளிவிட்டனர். இதில் எனது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இது திட்டமிட்ட தாக்குதல்” என்று மம்தா குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், இது தற்செயலான விபத்து என்று விளக்கம் அளித்தது.

மம்தாவின் காலில் அடிபட்டதை பிரசாந்த் கிஷோர் சாதகமாக மாற்றினார். முதல்வர் மம்தா சக்கர நாற்காலியில் அமர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதோடு மட்டுமன்றி திரிணமூல் காங்கிரஸின் வாக்கு வங்கி சிந்தாமல் சிதறாமல் இருக்க வியூகங்களை வகுத்தார்.

பாஜக தரப்பில் இந்துத்துவாவை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பிரசாந்த் கிஷோரின் வியூகத்தின்படி வங்கத்தின் கலாச்சாரத்தை முன்னிறுத்தி திரிணமூல் காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. இறுதியில் வங்காளிகள் என்று உணர்வு மேலோங்கி திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்குகள் விழுந்தன.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் செய்தும் பாஜகவால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. எனினும் அந்த கட்சி வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *