கல்லூரிகளில் ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான மதிப்பெண் வழங்குவது தொடர்பான அரசாணையை உயர் கல்வித் துறை முதன்மை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ளார்.
செமஸ்டர்களில் மாணவர்கள் பெற்ற புற மதிப்பீட்டு மதிப்பெண்களில் இருந்து 30%, இந்த பருவத்தின் அகமதிப்பீடு அல்லது தொடர்ச்சியான அகமதிப்பீட்டில் இருந்து 70% என மொத்தம் 100% மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு, முதன்மை பாடங்களுக்கும், மொழிப்பாடங்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
துணைப்பாடங்கள், விருப்பப்பாடங்களுக்கு 100% அகமதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளிக்கப்படும். செயல்முறை தேர்வு நடத்தப்படாமல் இருந்தால் ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். இதற்கு முந்தைய செமஸ்டரில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் அத்தேர்வுகளை பின்னர் எழுத வேண்டும்.தொலைநிலைக் கல்வியிலும் இதே நடைமுறை பின்பற்றப்படும்.
இந்த மதிப்பீட்டு முறையில் விருப்பம் இல்லாத மாணவர்கள் பின்னர் நடத்தப்படும் தேர்வில் பங்கேற்று மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளலாம். கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளித்து அவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா அறிவித்துள்ளார்.