சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவுக்குள் கூலித் தொழிலாளியை கொலை செய்தவர்கள் கூறிய தகவல்களைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மனைவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவரை, கணவரே கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
எர்ணாவூர்
சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜா (45). கூலித்தொழிலாளியான இவர் பிளாட்பாரத்தில் தங்கியிருந்தார். ராஜா, மாட்டுமந்தை மேம்பாலத்தின் கீழ் தங்கியிருந்தபோது அங்கு குடும்பத்துடன் தங்கியிருந்த ஹாஜிதாவுடன் (29) பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ராஜாவுடன் ஹாஜிதா பழகுவது அவரின் கணவர் அப்துல் கரீமுக்கு (35) தெரியவந்தது. அதனால் ஹாஜிதாவுக்கும் அப்துல் கரீமுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து மனைவிக்கு புத்திமதிக்கூறிய அப்துல்கரீம், ராஜாவையும் கண்டித்தார். இதன்பின் ராஜாவுடன் பேசுவதை ஹாஜிதா தவிர்த்துள்ளார். இதனால் அவருடன் ராஜா தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து மாட்டுமந்தை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ராஜா, தங்காமல் வேறு இடத்துக்கு சென்றுவிட்டார். இருப்பினும் ஹாஜிதாவுடன் அடிக்கடி ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டுவந்துள்ளார். இதுகுறித்து ஹாஜிதா, கணவரிடம் தகவலைத் தெரிவித்துள்ளார். அப்போது ராஜா உயிரோடு இருக்கும் வரை என்னால் நிம்மதியாக வாழ முடியாது என்று கூறியுள்ளார். அதனால் ராஜாவை கொலை செய்ய அப்துல் கரீம் முடிவு செய்தார்.
ஆட்டோவில் கொலை
இதுதொடர்பாக அப்துல் கரீம் தன்னுடைய நண்பர் கரிமுல்லாவுடன் (42) ஆலோசித்துள்ளார். இருவரும் சேர்ந்து ராஜாவை கொலை செய்ய திட்டமிட்டனர். இருவரும் ராஜாவை பின்தொடர்ந்துள்ளனர். ஜூலை 1-ம் தேதி மதுபோதையிலிருந்த ராஜா கால்போன போக்கில் நடந்துச் சென்றார்.
பின்னர் திருவொற்றியூர் வடிவுடையம்மான் கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவுக்குள் படுத்து தூங்கினார். அதைக் கவனித்த அப்துல் கரீம், கரிமுல்லா, நள்ளிரவில் அங்குச் சென்றனர். தூங்கிக் கொண்டிருந்த ராஜாவை இருவரும் தாக்கினர். அவர் சத்தம் போடாமலிருக்க வாயையும் பொத்திக் கொண்டனர். சரமாரியாக தாக்கியதில் ராஜா உயிரிழந்தார். பின்னர் அவரின் சடலத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
சிசிடிவி கேமராவில் சிக்கினர்
வடிவுடையம்மன் கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவுக்குள் ராஜா உயிரிழந்து கிடக்கும் தகவல் திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார், அங்கு வந்து ராஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப்பிறகு அவரின் சடலத்தை வாங்க உறவினர்கள் வரவில்லை.
ராஜாவின் சடலத்தை பிணவறையில் வைத்திருந்த போலீஸார் அவர் எப்படி இறந்தார் என்று விசாரித்தனர். விசாரணையில்தான் ராஜா கொலை செய்யப்பட்ட தகவல் தெரியவந்தது. இதையடுத்து கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோவுக்குள் வைத்து ராஜாவை இருவர் கொலை செய்யும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

3 பேர் கைது
அவர்கள் யாரென்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் மாட்டுமந்தை மேம்பாலத்தின் கீழ் தங்கியிருக்கும் அப்துல் கரீம், கரிமுல்லா எனத் தெரியவந்தது .அவர்களிடம் விசாரித்தபோது ராஜாவின் கொலைக்கான காரணம் தெரியவந்தது. தன்னுடைய மனைவிக்கு ராஜா, பாலியல்ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். அதனால்தான் அவரைக் கொலை செய்தோம் என்று அப்துல் கரீம் கூறியுள்ளார்.
அப்துல் கரீம் அளித்த தகவலின்படி கரிமுல்லா மற்றும் ஹாஜிதா ஆகியோரை போலீசார் கைது செய்து கொரோனா பரிசோதனைக்குப்பிறகு சிறையில் அடைத்துள்ளனர்.