ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக அபாரம்

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 150 வார்டுகளில் ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு 55 வார்டுகள் கிடைத்தன. பாஜக 49 வார்டுகளில் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு இணையாக வளர்ந்துள்ளது. ஒவைசியின்  ஏஐஎம்ஐஎம் கட்சி 43 வார்டுகளை கைப்பற்றியது. காங்கிரஸுக்கு 2 வார்டுகள் மட்டுமே கிடைத்தன.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை ஹைதராபாத்தில் உள்ள 30 மையங்களில் தொடங்கியது. மொத்தமுள்ள 150 வார்டுகளுக்கு 1,122 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். 

மின்னணு வாக்கு இயந்திரத்துக்கு  பதில், வாக்கு சீட்டு அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின்போது ஆரம்பம் முதலே ஆளும் கட்சியான டிஆர்எஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. சில வார்டுகளில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே இழுபறி நீடித்தது.. 

மொத்தமுள்ள 150 வார்டுகளில் 149 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் கட்சியான டிஆர்எஸ்  55 வார்டுகளில் வெற்றி பெற்றது. பாஜக 49 வார்டுகளையும். ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 43 வார்டுகளையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 2 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

கடந்த மேயர் தேர்தலில் வெறும் 4 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்த பாஜகவுக்கு இம்முறை 49 வார்டுகளில் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு இணையாக வளர்ந்துள்ளது. 

மேயர் பதவி யாருக்கு?

மாநகராட்சியின் 150 வார்டுகளிலும் டிஆர்எஸ், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தின. ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 51 வார்டுகளில் மட்டுமே போட்டியிட்டது. 

ஹைதராபாத் மாநகராட்சியில் 52 நியமன உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 45 பேருக்கு வாக்குரிமை உள்ளது. இதில் 31 பேர் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்தவர்கள். ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு 10, பாஜகவுக்கு 3, காங்கிரஸுக்கு ஓர் உறுப்பினர் உள்ளனர்.  

மேயர் பதவியில் அமர ஒட்டுமொத்தமாக 98 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மாநகராட்சி தேர்தலில் டிஆர்எஸ் கட்சிக்கு 56 வார்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன. 31 நியமன உறுப்பினர்களையும் சேர்த்து அந்த கட்சிக்கு 87 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. 

மாநகராட்சி தேர்தலில் ஒவைசியின்  ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் டிஆர்எஸ் கூட்டணி அமைக்கவில்லை.  எனினும் நட்பு கட்சியான ஏஐஎம்ஐஎம் ஆதரவுடன் டிஆர்எஸ் மேயர் பதவியை கைப்பற்றும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *