5,000 முறை பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், 143 ஆண்கள் தன்னை சீரழித்ததாகவும் இளம்பெண் ஒருவர் ஹைதராபாத் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் போலீஸில் புகார் அளித்தார். அவரது புகார் போலீஸாரை மட்டுமன்றி ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கி உள்ளது.
திருமணம், பலாத்காரம்
அந்த பெண்ணுக்கும் ஆந்திராவின் நலகொண்டா மாவட்டம் மிர்யாலாகுடாவை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. அப்போது முதல் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தொடங்கியது.
கணவர் குடும்பத்தை சேர்ந்த ஆண்கள், அவரை பலாத்காரம் செய்தனர். இதை கணவர் கண்டுகொள்ளவில்லை. ஓராண்டு நரக வேதனைக்குப் பிறகு கடந்த 2010-ம் ஆண்டில் கணவரை விவாகரத்து செய்த பெண், மீண்டும் தனது கல்லூரி படிப்பை தொடர்ந்தார்.
ஆன்லைன் செக்ஸ் கும்பல்

ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார். ஆனால் மீண்டும் அதே பாதாளத்தில் அவர் விழுந்தார். ‘ஆன்லைன் செக்ஸ்’ கும்பலிடம் சிக்கிய அந்த பெண், இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
பல நேரங்களில் கூட்டு பலாத்காரத்துக்கும் ஆளாகியுள்ளார். பல கிளப்புகளில் நிர்வாணமாக நடனமாட நிர்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பலமுறை மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளனர். உடலின் பல்வேறு இடங்களில் சிகரெட்டால் சூடு வைத்துள்ளனர்.
143 அரக்கர்கள்
அவரை பலாத்காரம் செய்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அறிமுகம் இல்லாத ஆண்களை அந்த பெண்ணால் அடையாளம் காட்ட முடியவில்லை.
ஆனால் சமூகத்தில் பிரபலமான, நன்கு தெரிந்த 143 அரக்க ஆண்களின் பெயர்களை அவர் புகாரில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதில் மாணவர் சங்க தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், மூத்த வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் என பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் யார் என்ற விவரங்களை போலீஸார் பகிரங்கமாக வெளியிடவில்லை.
கொலை மிரட்டல்
ஆன்லைன் செக்ஸ் கும்பலிடம் இருந்து விலகிவிட அந்த பெண் பலமுறை முயன்றுள்ளார். ஆனால் அவரது ஆபாச வீடியோவை வெளியிட்டுவிடுவோம். ஆசிட்டை வீசுவோம்.

கொடூரமாக கொலை செய்வோம் என பல்வேறு வகைகளில் அந்த கும்பல், பெண்ணை மிரட்டி மிரட்டல் விடுத்து அப்பெண்ணை பணியவைத்துள்ளது.
பலரிடம் சிக்கி சீரழிந்த பெண்ணுக்கு கடைசியில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவி கிடைத்துள்ளது. அந்த தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட பெண் ஹைதராபாத் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
25 வயதாகும் அந்த பெண் அளித்துள்ள புகார் தெலங்கானாவை மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக இருக்கும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் கூறும்போது, “இந்த பெண் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான பெண்கள் ஆன்லைன் செக்ஸ் கும்பலிடம் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்க வேண்டியது போலீஸாரின் கடமை.
எங்களது புகாரை போலீஸார் அலட்சியமாக விசாரிக்காமல் தீவிரமாக விசாரிக்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் பலரின் முகத்திரையை கிழிக்க முடியும்” என்று தெரிவித்தனர்.