12 மணி நேரம் வெள்ளத்தில் தத்தளித்த இளைஞர் ..ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் 12 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் ரத்தன்பூர் பகுதியில் கவுதாகாட் அணை உள்ளது.

பலத்த மழை காரணமாக அணை பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அணையின் பாலத்தில் இருந்து சிலர் கீழே குதித்து விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது ஜிதேந்திர குமார் காஷ்யப் (வயது 35) என்பவர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார்.

அதிர்ஷ்டவசமாக ஒரு மரத்தின் உச்சி கிளையை கெட்டியாக பிடித்த கொண்ட அவர் உதவி கோரி கதறினார்.
மாநில போலீஸார், தீயணைப்பு படை வீரர்கள், பேரிடர் மீட்பு படை வீரர்கள், தென்கிழக்கு நிலக்கரி சுரங்க லிமிடெட், தேசிய அனல் மின் நிலைய மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று வெள்ளத்தில் சிக்கியவரை மீட்க முயன்றனர்.

ஆனால் எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் மரத்தின் கிளையில் அவர் பரிதவித்துக் கொண்டிருந்தார்.
மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன்பேரில் விமானப் படை களத்தில் இறங்கியது.

ராய்ப்பூர் விமானப் படைத் தளத்தில் இருந்து எம்.17வி5 ரக ஹெலிகாப்டரில் மீட்புப் படை வீரர்கள் நேற்று சம்பவ இடத்துக்கு சென்றனர்.
ஹெலிகாப்டரில் இருந்து கயிறு ஏணி கீழே இறக்கப்பட்டது. அந்த ஏணியை ஜிதேந்திர குமார் காஷ்யப் பிடித்து ஏறி அமர்ந்தார்.

மீட்புப் படை வீரர்கள் அவரை லாவகமாக மேலே இழுத்து ஹெலிகாப்டரில் ஏற்றினர். மோசமான வானிலையிலும் விமானப்படையின் மீட்பு குழுவினர் இளைஞரை பத்திரமாக மீட்டனர்.

சுமார் 12 மணி நேரம் மரக்கிளையில் தத்தளித்து கொண்டிருந்த இளைஞரை மீட்ட விமானப்படை வீரர்களுக்கு மாநில போலீஸார் முதல் உள்ளூர் மக்கள் வரை சமூக வலைதளங்கள் வாயிலாக பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *