தங்க கடத்தல் வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி கைது

கடந்த ஜூலை 3-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு ஒரு பார்சல் வந்தது. ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு பார்சல் அனுப்பப்பட்டிருந்தது. எக்ஸ்ரே சோதனையில் பார்சலில் உலோகம் இருப்பது தெரியவந்தது. தூதரகத்திடம் கேட்டபோது, பார்சலில் உணவு பொருட்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  

இதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து ஐக்கிய அரபு தூதரக உயரதிகாரிகள் திருவனந்தபுரத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் முன்னிலையில் பார்சலை திறந்தபோது 30 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.13 கோடியாகும். தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்டுள்ளது.

இந்த தங்க கடத்தல் வழக்கை மத்திய அரசின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது. தூதரகத்தின் முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித் குமார் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலாளர் சிவசங்கரனுக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரை கைது செய்ய அக்டோபர் 28-ம் தேதி வரை கேரள ஐகோர்ட் தடை விதித்திருந்தது. இந்த கெடு முடிந்த நிலையில் முன்ஜாமீன் கோரி சிவசங்கரன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.

இதைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் இன்று கைது செய்யப்பட்டார். கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *