சென்னை ஆவடி, திருமுல்லைவாயல் பகுதிகளில் ஒரே நாள் இரவில் மூன்று இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் பால்கடையில் இருந்து ஐஸ்கிரீம்கள், பால்பவுடர்கள் திருடப்பட்டன.
சென்னை ஆவடி, பருத்திப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து வருபவர் பெலிக்ஸ் ( 36) . இவர் ஆவடி, கன்னிகாபுரம், காந்தி தெருவில் பால் விற்பனை கடை நடத்தி வருகிறார்.
இவர் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் இன்று காலை வழக்கம்போல் கடையை திறக்க சென்றபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

கடைக்குள் இருந்த 25 கிராம் எடையுள்ள 300 பால் பவுடர் பாக்கெட்டுகள், 16 ஐஸ் கிரீம்கள் மற்றும் கல்லா பெட்டியில் இருந்த 1,000 ரூபாய் திருட்டு போயிருந்தது. அதைப் பார்த்து பெலிக்ஸ் அதிர்ச்சி அடைந்தார். இதுபோல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி ஆப்ரேட்டர் அலுவலகத்திலும் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
அங்கு வேலை செய்து வரும் அம்பத்தூர், புதூர் பகுதியைச் சேர்ந்த அகமதுல்லா, 38 இன்று காலை அலுவலகத்தை திறக்க வந்தார்.
அப்போது கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த 4 லேப்டாப்கள், ஒரு டிவி ஆகியவை கொள்ளைப் போனதாக ஆவடி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

ஆவடி திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் தீபக்குமார். இவர் மளிகை நடத்தி வருகிறார். இவரின் கடையை உடைத்த கொள்ளையர்கள், கல்லா பெட்டியிலிருந்து 1500 ரூபாய், மளிகை பொருள்களைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தீபக்குமார், திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். கொள்ளை நடந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
ஒரே நாள் இரவில் தொடர்ச்சியாக 3 இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள் பீதியடைந்துள்ளனர்.